ஆண்டு தோறும் அதிக அளவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை மனதில் வைத்து ஆண்டு தோறும் அதிகளவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மடத்தூர் இந்து நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த சித்ரா, திண்டிவனம் எம்.டி.கிரேனே நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த ஜி.நாகராஜன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதில், ஏப்ரல் 2013-ஆம் ஆண்டு முதல் இதுவரை ஒரே ஒரு ஆசிரியர் தகுதித் தேர்வு மட்டும்தான் நடத்தப்பட்டுள்ளது.

ஆனால், அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் தேவை ஏராளமாக உள்ளன. அதனால், இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-இன் படி, முடிந்த அளவு அதிகமான ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரினர்.

இந்த மனு நீதிபதி டி.ஹரிபரந்தமான் முன்பு விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டும்தான் நியமனம் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாகிவிட்டது.

மனுதாரர்கள் இருவரும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் தகுதி இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு முன்பு பணியமர்த்தப்பட்ட மனுதாரர்கள் அடங்கிய பிரிவு தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பணியில் தொடரவும், அதற்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெறவும் கடந்த ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த ஆசிரியர்கள் அனைவரும் அரசு உதவி பெறும் பள்ளியில் கற்றுக் கொடுப்பதற்கு முழுத் தகுதி உடையவர்கள். ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதவில்லை.

இவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே தாற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்குள், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தகுதி பெற வேண்டும். இல்லையெனில், அவர்கள் தானாகவே பணியிலிருந்து வெளியேற வேண்டுயதுதான். எனவே, அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை மனிதில் வைத்துக் கொண்டு, ஆண்டு தோறும் அதிகளவில் ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழக அரசு நடத்த வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.


Comments

Popular posts from this blog