மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற தமிழக அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும் அதனை ஏற்க தமிழக அரசு மறுத்துவிட்டது.6-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டபோது, மத்திய அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களைவிட தமிழக அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ. 4,800 குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த வேறுபாட்டைக் களைய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், ஆசிரியர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை தமிழக அரசு கருத்தில் கொள்ளவில்லை. கேந்திரிய வித்யாலயம் பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வித் தகுதி அதிகம். மாநில அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு கல்வித் தகுதி குறைவு என்பது தவறான வாதமாகும். கேந்திரிய வித்யாலயம் பள்ளிகளில் ஆங்கிலத்தில் கற்பிக்கிறார்கள். தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் தமிழில் கற்பிக்கிறார்கள். அதனால் ஊதியம் குறைவு என்பதை ஏற்க முடியாது. தமிழை இதைவிட அவமதிக்க முடியாது.எதிர்காலத் தலைமுறையினரை உருவாக்குவதில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்தான் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்.
இதை உணர்ந்து மத்திய அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுத்தியுள்ளார்.
Comments
Post a Comment