தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நடைபெறும் பணியிட மாறுதல் கவுன்சிலிங்கில் நடந்துள்ளதாகக் கூறப்படும் பல நூறு கோடி ரூபாய் முறைகேட்டை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த பா.ம.க பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த ராமதாஸ் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் ஆசிரியர் பணியிட மாறுதலில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இடத்தின் தூரத்தை பொறுத்து ரூ.4 லட்சம் முதல், ரூ.7 லட்சம் வரை கைமாறியுள்ளது. இதில் ரூ. 500 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஜெயலலிதா சிறையில் இருக்கும்போது ஒரே நாளில் 3 ஆயிரம் பேருக்கு பணிமாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு தொழில் அதிபர் ரூ.10 கோடி முன்பணம் கொடுத்துவிட்டு அவர் சொல்லும் நபர்களுக்கு மட்டுமே இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் ஆசிரியர் பணி நியமனத்தில் நடந்த ஊழலை சி.பி.ஐ. விசாரித்தது. இதில் அம்மாநில முதல்வர் சவுதாலா மற்றும் அவரின் இரு மகன்களுக்குத் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. எனவே தமிழக ஆசிரியர் பணியிட மாறுதல் ஊழலையும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கூறினார்.
Comments
Post a Comment