இடஒதுக்கீட்டில் அலட்சியம் : மாற்றுத்திறனாளிகள் அரசுபணியில் புறக்கணிக்கப்படும் அவலம் அரசு வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டைதமிழக அரசு முறையாக பின்பற்றாத காரணத்தால் ஒரு சதவீதத்திற்கும் குறைவான நபர்களே பயனடைந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். தமிழக அரசை பொறுத்தவரையில் டிஎன்பிஎஸ்சி மற்றும் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் 3 சதவிதம் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு பணியிடங்களில் ஆட்கள் தேர்வு செய்யும்போது, 69 சதவித இடஒதுக்கீடு, பெண்களுக்கான 33 சதவித இடஒதுக்கீடு ஆகியவை சரியாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதே சமயம் மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த விஷயத்தில் பாரபட்சம் காட்டப்படுகிறது. இந்த நியமனத்தில் அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். எனவே, இது குறித்து உண்மை அறிய, தலைமை செயலாளரின் தலைமையில் பல துறைகளை சேர்ந்த செயலாளர்களை ஒருங்கிணைத்து 15 பேர் கொண்ட குழுவை அரசு கடந்த 2012ம் ஆண்டு அமைத்தது. இக்குழுவின் முக்கிய வேலை, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை கூடி துறைகளில் மேற்கொள்ளப்பட்ட பணி நியமனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் அளிக்கப்பட்ட விவரங்கள் மற்றும்நிரப்பப்படாத காலி பணியிடங்களை முன்கொணர்தல் போன்றவற்றை ஆராயும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், இக்குழு அமைக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் மாற்றுத்திறனாளிகளை அரசு வேலைகளில் பணியமர்த்துவதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதன்படி, 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரியும் அரசு அலுவலகங்களில் 3 சதவீதம் இடஒதுக்கீடு அடிப்படையில் பார்த்தால் 36,000 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்க வேண்டும். ஆனால், சுமார் 3,500 மாற்றுத்திறனாளிகள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, பார்வையற்றோருக்கான கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தை சேர்ந்த சிவக்குமார் கூறியதாவது: தமிழக அரசு 3 சதவீதம் இடஒதுக்கீடு அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பணிகளை வழங்காததால் பெரும் இன்னல்களை சந்தித்து வருகிறோம். அரசு பணிகளை பெறுவதற்கான கல்வி தகுதி இருந்தும் மாற்றுத்திறனாளிகளில் பலர் ரயில்களில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பது உட்பட பல சிறுதொழில்களை செய்து வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அரசு பணியிடங்களில் இதுவரை ஒரு சதவீதத்திற்கும் குறைவான இடத்திலேயே மாற்றுத்திறனாளிகள் பணிபுரிந்து வருகிறோம். எந்த உயர் பதவிகளிலும் மாற்றுத்திறனாளிகளை அரசு அமர்த்துவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog