ஓராண்டாக நிரப்பாமல் இருக்கும் 6 லட்சம் காலிப் பணியிடங்களை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு

நாடு முழுவதும் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை நிரப்புவதற்கு பதிலாக, அதனை முழுவதுமாக ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம் என மத்திய அரசு ஊழியர்கள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

 நரேந்திர மோடி தலைமையிலான பாஜ அரசு மத்தியில் பொறுப்பேற்றவுடன், அதிரடியாக பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிக்கன நடவடிக்கை என்ற புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியது.

 அதன்படி மத்திய அரசு அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது விமானங்களில் எக்சிக்யூட்டிவ் வகுப்பில் பயணம் செய்யக் கூடாது. அதிக பொருட்செலவில் விருந்து வைப்பதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட நடைமுறைகளை வகுத்துள்ளது. தவிர, மத்திய அரசில் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடத்தை நிரப்பாமல், அதனை நிரந்தரமாக ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதுகுறித்து மத்திய அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் துரைபாண்டியன் கூறியதாவது: 10 ஆண்டுகளுக்கு முன்பு, நாடு முழுவதும் மத்திய அரசு பணிகளில் 42 லட்சம் பேர் பணி புரிந்தனர். படிப்படியாக இது குறைக்கப்பட்டு, தற்போதைய நிலவரப்படி 36 லட்சம் பணியிடங்கள் இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. 

இதில் 30 லட்சம் பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். மீதமுள்ள 6 லட்சம் பணியிடங்கள் கடந்த 2 ஆண்டுகளுக் கும் மேலாக காலியாகவே உள்ளது. இந்நிலையில், ஓர் ஆண்டுக்கு மேல் காலியாக உள்ள பணியிடங்களை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த 28ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. 

அதன்படி இந்த 6 லட்சம் பணியிடங்களையும் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இருக்கும் ஊழியர்களே கூடுதல் பணிகளையும் செய்வதால், காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

Comments

Popular posts from this blog