TNTET:ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பிற்காக காத்திருக்கும் ... -புதியதலைமுறை தொலைக்காட்சி இந்தாண்டு நிறைவடைய இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகததால், தேர்விற்காக காத்திருப்பவர்களும், குறிப்பாக தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டது முதல் அது சந்தித்து வரும் சிக்கல்களின் எண்ணிக்கை எண்ணற்றதாக உள்ளது. நடத்தப்பட்ட தகுதித் தேர்விலும், அதற்கு பிறகான பணி நியமனத்திலும் தாமதங்கள் ஏற்பட்டு வந்த நிலையில்,இந்தாண்டிற்கான அறிவிப்பே இன்னும் வெளியாகாமல் உள்ளது. 2010-ல் அறிவிக்கப்பட்ட இந்த தகுதித் தேர்வு முறை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உடனடியாக அமல்படுத்தப்பட்டு தனியார் பள்ளிகளில் பணிபுரிபவர்களுக்கு ஐந்தாண்டுகள் கால அவகாசம் அளிக்கப்பட்டது.2015-ம் ஆண்டோடு அந்த அவகாசம் முடிவடைய உள்ள நிலையில் இந்தாண்டிற்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டிய கட்டாயம் பல தேர்வர்களுக்கு ஏற்பட்டுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு வரும் இத்தேர்வு அறிவிக்கப்படாததற்கு,அதிக அளவில் தொடரப்படும் வழக்குகளும் காரணமாக கூறப்படுகிறது. 2012-ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்விற்கும் அது சார்ந்த பிரச்னைகளுக்காகவும் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழக அரசு ஏராளமான வழக்குகளை சந்தித்திருக்கிறது எனக் கூறப்படுகிறது.ஆனால், இப்போது நடைபெற்று வரும் வழக்குகள் தேர்வு சார்ந்ததல்ல என்றும் நியமனம் தொடர்பாகவே இருக்கும்பட்சத்தில் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் தேர்வை நடத்தியிருக்க வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள். வழக்குகள் தவிர பல்வேறு போராட்டங்களும் நடந்த வண்ணம் உள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியத் தரப்பில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான விளக்கம் எதுவும் அளிப்படவில்லை. எனினும், அடுத்த மாதத்திற்குள் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog