டி.இ.டி., 'விலக்கு'க்கு கிடைத்தது 'விளக்கம்' : 'தினமலர்' செய்தியால் ஆசிரியர்கள் நிம்மதி

'தமிழகத்தில் 23.8.2010க்கு முன் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, அதன் பின்பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு (டி.இ.டி.,) தேர்ச்சியில் விலக்கு அளிக்க வேண்டும்,' என, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மீண்டும் இயக்குனர் அலுவலகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதன்மூலம் 18 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது. 'கடந்த 2010 ஆக., 23க்கு முன் ஆசிரியர் பணி நியமன சான்றிதழ் சரிபார்ப்பு அல்லது அதுதொடர்பான நடவடிக்கைக்கு உட்பட்டிருந்தால் 2013 ஆக., 23க்கு பிறகும் பணி நியமனம் செய்யப்பட்ட அந்த ஆசிரியர்களுக்கு தகுதி (டி.இ.டி.,) தேர்வில் விலக்கு அளிக்கப்படும்' என ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவித்தது. 

இதன் அடிப்படையில், 2010 முதல் 2013 வரை அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் 18 ஆயிரம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணியில் சேர்ந்தனர். இவர்கள் தகுதி காண் பருவத்திற்கு விண்ணப்பித்தனர். அதை கல்வி அதிகாரிகள் ஏற்காமல், 'ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின் தான் தகுதி காண் பருவத்தை முடிக்க இயலும்' என விண்ணப்பங்களை திருப்பி அனுப்பினர். 

இதனால், ஊதிய உயர்வு, ஊக்க ஊதியம், பண்டிகை கால முன்பணம், வங்கி கடன் வாய்ப்பு உட்பட எவ்வித பலனும் கிடைக்காமல் 18 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக 'தினமலர்' நாளிதழில் அக்.,11ல் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, கல்வி இயக்குனர் அலுவலகம் மூலம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் 'இமெயில்' தகவல் அனுப்பப்பட்டது. 

இதில் '2010 ஆக., க்கு முன் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, பின் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு டி.இ.டி., தேர்ச்சியில் விலக்கு அளிக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது. இதனால், தகுதிகாண் பருவம் உட்பட அனைத்து பலன்களும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் நாகசுப்பிரமணியன், செயலாளர் முருகன் கூறுகையில், 'டி.ஆர்.பி.,யின் டி.இ.டி., தேர்ச்சி விலக்கை கல்வி அதிகாரிகள் நடைமுறைப்படுத்தவில்லை. இதனால் தகுதி காண் பருவத்தை அவர்கள் முடிக்கமுடியவில்லை. இதை 'தினமலர்' நாளிதழ் சுட்டிக்காட்டியது. இதன்பின் இயக்குனர் அலுவலகம் வெளியிட்ட தெளிவான அறிவிப்பால் குழப்பத்திற்கு விளக்கம் கிடைத்துள்ளது' என்றனர்

Comments

Popular posts from this blog