ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை ரத்து: அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்  

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பெண் சலுகை செல்லாது என உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியுள்ளதை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். 

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது. 

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது. இந்தத் தீர்ப்பு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். தேர்ச்சி மதிப்பெண்ணைக் குறைப்பதால் கல்வியின் தரம் குறைந்துவிடும் என்ற வாதம் ஏற்றுக் கொள்ளக் கூடியது இல்லை. 

ஆசிரியர் தகுதித் தேர்வை அறிமுகம் செய்வதற்கு முன்பாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மிகச் சிறந்த மாணவர்களை உருவாக்கியுள்ளனர். தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்களை நிர்ணயம் செய்ய மாநில அரசுகளுக்குத் தேசிய ஆசிரியர் கல்விக் குழு அதிகாரம் வழங்கியிருக்கிறது. 

எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண் செல்லாது என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். மேலும் தேவையற்ற குழப்பங்களையும், முறைகேடுகளையும் தவிர்க்க தகுதிகாண் மதிப்பெண் முறையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog