முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற பட்டதாரி ஆசிரியர்கள் கைது- Tamilmurasu

முதல்வர் ஜெயலலிதா வீட்டை முற்றுகையிட முயன்ற பட்டதாரி ஆசிரியர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள்அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். வெயிட்டேஜ் முறையை முழுவதும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

கடந்த 18ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களை கைது செய்த போலீசார் பின்னர், உடனடியாக விடுவித்தனர். இந்நிலையில், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரை சந்திக்கப்போவதாக பட்டதாரி ஆசிரியர்கள் அறிவித்தனர். 

இதைத் தொடர்ந்து முதல்வர்வசித்து வரும் போயஸ் கார்டன், முதல்வர் தலைமை செயலகம் செல்லும் பாதை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை முதல்வர் வீட்டை முற்றுகையிட போவதாக பட்டதாரி ஆசிரியர்கள் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே திரண்டனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற அண்ணா சதுக்கம் போலீசார் அனைவரையும் கைது செய்தனர். 

அதேபோல் 50க்கும் மேற்பட்டோர் மெரினாவில் உள்ள காந்தி சிலை அருகே ஒன்று கூடி புறப்பட்டனர். அவர்களையும் மெரினா போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அருகில் உள்ள சமூக நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். 

போராட்டம் குறித்து பட்டதாரி ஆசிரியர்கள் கூறுகையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். வெயிட்டேஜ் முறையை முழுவதும் ரத்து செய்ய வேண்டும். வெயிட்டேஜ் முறையை நீக்காவிட்டால் வயது முதிர்ந்த பட்டதாரிகள் எந்த காலத்திலும் பணி நியமனம் பெறமுடியாத நிலை ஏற்படும். 

எங்களின் இந்த கோரிக்கை மீது அரசு நடவடிக்கைஎடுக்காவிட்டால், டிஇடி முடித்த 62,500 பேர் தொடர் உண்ணாவிரதம் இருப்போம். அதற்கும் நடவடிக்கை இல்லை என்றால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்றனர்.

Comments

Popular posts from this blog