ஆசிரியர் பணி நியமனங்கள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமனங்கள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும் எனஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூத்த அதிகாரிகூறினார்.  

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் 13 ஆயிரம் பேரும், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேரும் நியமிக்கப்பட உள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள், இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) வெளியிடப்பட்டுள்ளது. 

இதில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வு, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் தேர்வுப் பட்டியல் ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்வுப் பட்டியல் வெளியிடப்படவில்லை. 

பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையிலும் தேர்வுப் பட்டியல் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படுவதாக தேர்வர்கள் புகார் தெரிவித்தனர். 

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தினமணி நிருபரிடம் கூறியது: ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான பல்வேறு வழக்குகள் காரணமாக தேர்வுப் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இப்போது பெரும்பாலான வழக்குகள் நிறைவடைந்த நிலையில் ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. 

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் சில பாடங்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர் நியமனங்கள், வழக்குகள் காரணமாக நிலுவையில் இருந்தன. நீதிமன்ற உத்தரவுப்படி, சில விடைகள் மீண்டும் மதிப்பீடு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும் நபர்களுக்கான திருத்தப்பட்ட பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

 ஒரு வாரத்துக்குள்... பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல், எஞ்சியுள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல் ஆகியவை தொடர்பாக பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ளன. எனவே, இந்த இரண்டு தேர்வுப் பட்டியல்களும் ஒரு வாரம் அல்லது 10 நாள்களுக்குள் வெளியிடப்படும். 

அடுத்ததாக, இடைநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும். ஒரு மாதத்துக்குள் இப்போது நிலுவையில் உள்ள பெரிய அளவிலான ஆசிரியர் பணி நியமனங்கள் முடிக்கப்படும் என்றார் அவர்.

Comments

Popular posts from this blog