2.87 லட்சம் அரசு பணியிடங்கள் காலி:அரசு ஊழியர் சங்க செயலர் தகவல் ராமநாதபுரம்;'தமிழகத்தில், 2.87 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன' என, தமிழக அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலர் பாலசுப்ரமணியன் கூறினார்.ராமநாதபுரத்தில், நிருபர்களிடம், அவர் கூறியதாவது:தமிழக வருவாய் துறையில், 2,000 வி.ஏ.ஓ.,க்கள்; 70 துணை கலெக்டர்கள்; வணிக வரித் துறையில், 4,600; தேர்வாணையத்தில், 150; வேலைவாய்ப்பு துறையில், 470; சமூக நலத்துறையில், 970; சத்துணவு திட்டத்தில், 25 ஆயிரம்; ஐ.சி.டி.எஸ்.,சில், 10 ஆயிரம்; கல்வித் துறையில், 5,000; உணவு பொருள் வழங்கல் துறையில், 750; நகராட்சிகளில் 17 ஆயிரம் என, 2.87 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. இதில், அனைத்து அரசு அலுவலகங்களிலும், 2 லட்சம் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களே, அதிகளவில் காலியாக உள்ளன. 2014ல், 1.50 லட்சம் பேர் ஓய்வு பெறுகின்றனர்.நாடு சுதந்திரம் அடைந்தபோது இருந்த மக்கள் தொகை அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை, 67 ஆண்டுகளாக தொடர்கிறது. மூன்று மடங்கு அளவுக்கு ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மாறாக, தினக்கூலி, தொகுப்பூதிய ஊழியர்களை கொண்டு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. குறைவான ஊதியத்தால், படித்த இளைஞர்களின் வாழ்க்கை தரம், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.தொகுப்பூதிய ஊழியர்களின் தவறுகளுக்கு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முடியாத நிலையும் உள்ளது. காலி பணியிடங்கள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்வதால், அரசின் புதிய திட்டங்களை அமல்படுத்தும்போது, பணிச்சுமையால் ஊழியர்கள் மனஉளைச்சல் அடைகின்றனர்.பங்களிப்புடன் கூடிய, புதிய ஓய்வூதியத் திட்டத்தில், 1.76 லட்சம் ஊழியர்களிடம் பிடித்தம் செய்த தொகையை, ஓய்வுபெறும் நாளில் கொடுக்காமல் நிலுவையில் உள்ளது.அரசு நிர்வாகங்களில் தேக்க நிலையை போக்க, காலி பணியிடங்களை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு, பாலசுப்ரமணியன் கூறினார்.

Comments

Popular posts from this blog