உதவி பேராசிரியர் பணிக்கு கூடுதல் தகுதி படிவம்: சமர்ப்பிக்க, டி.ஆர்.பி., அறிவுறுத்தல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்கள், கூடுதல் தகுதிகள் குறித்த படிவங்களை, ஜூலை 1 முதல், 4ம் தேதிக்குள் சமர்ப்பிக்க, ஆசிரியர்தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான, அறிவிப்பு வெளியிடப்பட்டு, கடந்தாண்டு நவ., 25 மற்றும் டிச., 6ம் தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதுகுறித்த மதிப்பெண்கள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, இந்தாண்டு ஜன., 30 மற்றும் பிப்., 1ம் தேதிகளில், மீண்டும் ஒரு முறை, விடுபட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இந்நிலையில், அரசின் அறிவுறுத்தல்படி, சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களிடம் இருந்து, சில தகவல்களைப் பெற, டி.ஆர்.பி., முடிவெடுத்துள்ளது. இதன்படி, சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்கள், கல்வியியல்கல்லூரியில் பணியாற்றி, அனுபவம் பெற்றிருந்தால் படிவம் 1 ஐயும், 2009,ஏப்ரல், 3ம் தேதிக்கு முன், எம்.பில்., முடித்து, சரியான பணிச்சான்று பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பின் போது, அதற்கான 'தகுதி மதிப்பெண்' பெறாதவர்கள், படிவம் 2 ஐயும் சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிவங்களை, தமிழ் மற்றும் ஆங்கிலத் துறையைச் சேர்ந்தவர்கள், ஜூலை, 1ம் தேதி; வணிகவியல் துறையினர், 2ம் தேதி; கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்,வரலாறு மற்றும் பொருளியல் துறையினர், 3ம் தேதி; கம்ப்யூட்டர் அறிவியல் மற்றும் பிற துறையினர், 4ம் தேதி, சென்னை, காயிதே மில்லத் பெண்கள் கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog