இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு தேதிகள் மாற்றம்

 தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 

இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. மாவட்ட மாறுதல் கோரும் ஆசிரியர்களின் நலனைக் கருத்தில்கொண்டு மாவட்ட மாறுதல் கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் நடைபெற உள்ளது. இதனால் கலந்தாய்வு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 

இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு ஜூன் 28-ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய 2 நாள்கள் நடைபெறும். பட்டதாரி ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு ஜூன் 21-க்கு பதிலாக ஜூலை 2-ஆம் தேதி நடைபெறும். ஆசிரியர்களின் பயணத்தைக் குறைக்கும் வகையில் இப்போது பணிபுரியும் மாவட்டத்திலிருந்தே தங்களுக்கு விருப்பமான மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் வகையில் ஆன்-லைன் மூலம் நடைபெறுகிறது. 

பிற கலந்தாய்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் நடைபெறும் என இளங்கோவன் தெரிவித்துள்ளார். 530 பேருக்கு பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற்றது. 

இந்தக் கலந்தாய்வில் 1,069 நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர். இவர்களில் 286 பேர் விரும்பிய இடங்களுக்கு மாறுதல் பெற்றனர். மேலும் 101 தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர்கள், நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாகவும், 143 பட்டதாரி ஆசிரியர்கள், நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாகவும் பதவி உயர்வு பெற்றனர்

Comments

Popular posts from this blog