உதவி பேராசிரியர் தேர்வில் குளறுபடி; மதிப்பெண் வழங்குவதில் பாரபட்சம் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 1,096 உதவி பேராசிரியர்களை நியமனம் செய்வதில், குளறுபடி ஏற்பட்டுள்ளது. 'ரெகுலர்' முறையில், எம்.பில்., படித்து, வேலை பார்த்தவர்களுக்கு, அனுபவத்திற்கான மதிப்பெண்ணை வழங்காத, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., 'அஞ்சல் வழியில் படித்தவர்கள், திறந்த நிலை பல்கலையில், எம்.பில்., படித்தவர்களுக்கு, அனுபவத்திற்கான மதிப்பெண் வழங்கப்படும்' என, அறிவித்திருப்பது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பணி அனுபவம்: உதவி பேராசிரியர் தேர்வுக்கு, பி.எச்டி., முடித்தால், 9 மதிப்பெண்; ஆசிரியர் பணி அனுபவத்திற்கு, 14 மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வுக்கு, 10 மதிப்பெண் என, 33 மதிப்பெண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போட்டி தேர்வு எதுவும் கிடையாது. சரிபார்ப்பு: இதனடிப்படையில், தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்ய, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்து உள்ளது. உதவி பேராசிரியர் பணிக்கு, 14 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு, கடந்த ஆண்டு நவம்பரில், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அப்போது, 'ரெகுலர்' முறையில், எம்.பில்., முடித்த வர்களின் பணி அனுபவத்திற்கு, டி.ஆர்.பி., மதிப்பெண் வழங்கவில்லை. பி.எச்டி., பட்டம் பெற்றதற்கு பின் இருந்த பணி அனுபவத்தை மட்டும், கணக்கில் எடுத்துக் கொண்டது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன், தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை யில், '2009, ஏப்ரல், 3ம் தேதிக்கு முன், அஞ்சல் வழி கல்வி திட்டம் மற்றும் திறந்த நிலை பல்கலையில், எம்பில்., பட்டம் பெற்றவர்களின் பணி அனுபவத்தை கணக்கில் கொண்டு, அதற்கேற்ப, மதிப்பெண் வழங்கப்படும்' என, தெரிவித்துள்ளது. 'இந்த அரசாணையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, ஜூலை, 1ம் தேதி முதல், 4ம் தேதி வரை, சிறப்பு முகாம் நடத்தப்படும்' என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. அனுபவத்திற்கான மதிப்பெண் வழங்குவதில், இந்த முரண்பாடான நிலையால், 'ரெகுலர்' முறையில், எம்.பில்., படித்து, பணி அனுபவம் உள்ளவர்கள், கடுமையாக பாதிக்கப்படுவர் என, புகார் எழுந்துள்ளது. வழங்கவில்லை: இதுகுறித்து, சில விண்ணப்ப தாரர்கள் கூறியதாவது: உதவி பேராசிரியர் தேர்வில், ஒவ்வொரு மதிப்பெண்ணும், முக்கியமாக உள்ளது. பணி அனுபவத்திற்கு, அதிகபட்சமாக, 14 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்கு, 2 மதிப்பெண் என, அதிகபட்சமாக, 7 ஆண்டுகள் பணி அனுபவம் இருந்தால், 14 மதிப்பெண், முழுமையாக கிடைக்கும். 'ரெகுலர்' முறையில், எம்பில்., முடித்து, 7, 8 ஆண்டுகளில் வேலை பார்த்த எங்களுக்கு, எந்த மதிப்பெண்ணும் வழங்கவில்லை. பி.எச்டி., பட்டம் பெற்றதற்குப் பின் இருந்த அனுபவத்திற்கு மட்டுமே மதிப்பெண் கிடைத்துள்ளது. தற்போது, அஞ்சல் வழியில் எம்.பில்., முடித்து, பல ஆண்டு களாக வேலை பார்த்தவர்களுக்கு, 14 மதிப்பெண் முழுமை யாக கிடைக்கும். அத்துடன், பி.எச்டி.,க்கு, 9 மதிப்பெண் கிடைக்கும். கடும் பாதிப்பு: இதன்மூலம், 'ரெகுலர்' முறையில் படித்து, அனுபவம் வாய்ந்த எங்களை விட, அஞ்சல் வழியில் படித்தவர்கள், தேர்வு பட்டியலில், முன்னுக்கு வந்துவிடுவர். இதனால், எங்களுக்கு, கடும் பாதிப்பு ஏற்படும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரத்தில் கேட்டபோது, சரியான பதிலை அளிக்கவில்லை. 'அரசாணையில் என்ன தெரிவிக்கப்பட்டு உள்ளதோ, அதன்படி, நாங்கள் செயல்படுகிறோம்' என, அந்த வட்டாரம் தெரிவித்தது.

Comments

Popular posts from this blog