ஆசிரியர் தகுதித் தேர்வு: வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடும் பழைய முறை ரத்து 

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்காக வழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடும் பழைய முறையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அடுத்த கல்வி ஆண்டுக்குள் புதிய அறிவியல் பூர்வ முறையை உருவாக்கி வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிட தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சி.பிரியவதனா உள்பட பலர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் என இரு பிரிவினருக்கு தனித்தனியாக மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 

அதில், இடைநிலை ஆசிரியர்களுக்காக, மேல்நிலைப் படிப்புக்கு 10 சதவீத மதிப்பெண்ணும், டிகிரி படிப்புக்கு 15 சதவீத மதிப்பெண்ணும், ஆசிரியர் பட்டயப்படிப்புக்கு 15 சதவீத மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல், பட்டதாரி ஆசிரியர்களுக்காக,மேல்நிலைப் படிப்புக்கு 15 சதவீத மதிப்பெண்ணும், டிகிரி மற்றும் பி.எட். படிப்புக்கு 25 சதவீத மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில், 2012-ஆம் ஆண்டு அரசு ஆணையின் படி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்குகிறது. 

அதில், இடைநிலை ஆசிரியர்கள் 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றால், அதற்கு, 15 வெயிட்டேஜ் மதிப்பெண்கள், 80 முதல் 90 சதவீத மதிப்பெண்களுக்கு 12 வெயிட்டேஜ் மதிப்பெண்கள், 70 முதல் 80 சதவீத மதிப்பெண்களுக்கு, 9 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 60 முதல் 70 சதவீத மதிப்பெண்ணுக்கு 6 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 50 முதல் 60 சதவீத மதிப்பெண் பெற்றால் 3 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது. 

இதே போன்று பட்டதாரி ஆசிரியர்களுக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. இதன் மூலம், 80 முதல் 90 மதிப்பெண் பெற்றவருக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவதிலும், 90 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தவருக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவதிலும் அதிக வேறுபாடு உள்ளது. அவ்வாறு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது தவறு. அதனால், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படும் முறையை மாற்ற வேண்டும். அதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. 

மேலும், ஆசிரியர் தேர்வின் தேர்ச்சி வீதத்தில் வழங்கப்படும் 5 சதவீதத்தை ரத்து செய்ய வேண்டும் என சிலரும், 2012-ஆம் ஆண்டு முதல் தேர்ச்சியில் 5 சதவீதம் தளர்வு வழங்க உத்தரவிட வேண்டும் என சிலரும் மனுத் தாக்கல் செய்தனர். 

இந்த மனுக்கள் மீது நீதிபதி எஸ்.நாகமுத்து முன்பு விசாரணை நடந்தது. மனுதாரர் பிரியவதனா தரப்பில் வழக்குரைஞர் எஸ்.நமோநாராயணன் ஆஜரானார். அரசுத் தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜரானார். 

விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு வழங்குவது அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. மேலும், 5 சதவீத தளர்வை முன் தேதியிட்டு வழங்குமாறும் அரசுக்கு உத்தரவிட முடியாது. அவ்வாறு உத்தரவிட்டால் அதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படும். எனவே, தேர்ச்சி சதவீதத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. 

மேலும், 60 லிருந்து 69 சதவீதம் பெற்றவருக்கு ஒரு வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 70 மதிப்பெண் பெற்றவருக்கு வேறொரு வெயிட்டேஜ் மதிப்பெண்ணும் கணக்கிடப்படுவதை ஏற்க முடியாது. அதில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஒவ்வொருவரும் பெற்ற மதிப்பெண்ணுக்கேற்ப வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிட வேண்டும். அதில் அறிவியல் பூர்வ முறையை பின்பற்ற வேண்டும். அது தொடர்பாக நீதிமன்றம் ஒரு முறையை அரசுக்கு பரிந்துரை செய்கிறது. அதை பின்பற்றினாலும் சரி அல்லது அரசு தரப்பில் வேறு ஒரு அறிவியல் பூர்வ அணுகுமுறையை கொண்டுவந்தாலும் சரி. அது தொடர்பாக புதிய அரசாணை வெளியிட வேண்டும். 

அரசு இந்த முறையை அடுத்த கல்வி ஆண்டுக்குள் கொண்டு வரும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது. எனவே, வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படும் பழைய முறை ரத்து செய்யப்படுகிறது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog