வி.ஏ.ஓ., தேர்வுக்கு 5 லட்சம் பேர் விண்ணப்பம். ஜூன், 14ம் தேதி நடக்க உள்ள கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) தேர்வுக்கு,இணையதளம் வழியாக, இதுவரை, ஐந்து லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, அரசுப்பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.,) வட்டாரம் தெரிவித்தது. கடைசி தேதியான வரும், 15க்குள், மேலும் 5 லட்சத்திற்கும், அதிகமானோர் விண்ணப்பிக்கலாம் எனவும், தேர்வாணையம் எதிர்பார்க்கிறது.தமிழக வருவாய்த்துறையில், 2,342 வி.ஏ.ஓ., காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு, கடந்த மாதம் 17ல், வெளியானது. அன்றிலிருந்து, வரும் 15 வரை, www.tnpsc.gov.in என்ற, தேர்வாணைய இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் போட்டி: இந்த வேலைக்கு, 10ம் வகுப்பு கல்வி தகுதி என்பதால், வழக்கம் போல், ஏராளமானோர் போட்டி போட்டு, விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த 15 நாளில், ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர் என, தேர்வாணைய வட்டாரம் தெரிவித்தது. கடைசி நாளான, வரும் 15க்குள், மேலும், ஐந்து லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என, எதிர்பார்ப்பதாகவும், அத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. எனவே, மொத்த விண்ணப்பதாரர் எண்ணிக்கை, 10 லட்சத்தை தாண்டிவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. குரூப் - 4: கடந்த ஆண்டு, ஆகஸ்ட்டில் குரூப் - 4 தேர்வு நடந்தது. இதன் முடிவு, சமீபத்தில் வெளியானது. இளநிலை உதவியாளர், 3,704, தட்டச்சர், 1,843,சுருக்கெழுத்து தட்டச்சர், 308 என, 5,855 காலி பணியிடங்களை நிரப்ப, கடந்த மாதம் 24 முதல், கலந்தாய்வு நடந்து வருகிறது. முதலில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடந்தது. இதில், 348 பேருக்கு, பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பொது பிரிவினருக்கான கலந்தாய்வு, நேற்று துவங்கியது.

Comments

Popular posts from this blog