"டெட்' தேர்வு: பணி நியமனம் கேட்டு ஆர்ப்பாட்டம்-Dinamani 

சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை கோரிக்கை மனுவுடன் ஆர்ப்பாட்டம் நடத்திய தேர்வர்கள். ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதலில் பணி நியமனம் வழங்கக் கோரி சென்னையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு தேர்வர்கள் கோரிக்கை மனுவுடன் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இது தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கூறியது: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி நியமனங்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் முறை பின்பற்றப்படுவதில்லை. எனவே, பட்டதாரி ஆசிரியர் நியமனத்திலும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையைப் பின்பற்றக்கூடாது. ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பாணையில் 60 சதவீதம் (90 மதிப்பெண்) எடுத்தால்தான் தேர்ச்சி என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தேர்ச்சி மதிப்பெண் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 55 சதவீதமாக (82 மதிப்பெண்) குறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும், ஒவ்வொரு தரத்தில் மதிப்பெண்கள் வழங்கப்படுவதால், தகுதித் தேர்வில் எங்களை விட குறைவான மதிப்பெண் எடுத்தவர்கள் கூட, வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் ஆசிரியராக பணி நியமனம் பெற வாய்ப்புள்ளது. 

எனவே, மதிப்பெண் தளர்வை அடுத்துவரும் தேர்வுகளில்தான் நடைமுறைப்படுத்த வேண்டும். இந்தத் தேர்வில் நடைமுறைப்படுத்தக்கூடாது. அவ்வாறு நடைமுறைப்படுத்தினால், முதலில் 60 சதவீத மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றவர்களுக்கும், அடுத்ததாக மதிப்பெண் சலுகையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog