தகுதித்தேர்வில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவதில் சிக்கல்- அனுமதி அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பி அவசர கடிதம். 

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டதால், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் அனுமதி கோரி ஆசிரியர் தேர்வு வாரியம் அவசர கடிதம் எழுதியிருக்கிறது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வின் முடிவு ஜனவரியில் வெளியிடப் பட்டது.அதில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற 26 ஆயிரம் பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டது.இந்த நிலையில், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணை 5 சதவீதமாக குறைத்து கடந்த பிப்ரவரி 6-ம்தேதி அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த 5 சதவீத மதிப்பெண் தளர்வு சலுகை காரணமாக கூடுதலாக 47 ஆயிரம் பேர் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றனர். தேர்தல் நடத்தை விதிகளால் சிக்கல் அவர்களில் முதல்கட்டமாக இடைநிலை ஆசிரியர்களுக்கு மார்ச் 12-ம் தேதி முதல் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கும்பகோணம் ஆகிய 5 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். 

அதைத்தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. முதல் தாளில்வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதமும் ஆன்லைனிலேயே வெளியிடப்பட்டது. 

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம், புதன்கிழமை (6-ம் தேதி) வெளியிட்டது. இதையடுத்து, தமிழகம் உள்பட நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால், தகுதித்தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்றவர் களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தகுதித்தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பான அறிவிப்பு நடத்தை விதி அமல்படுத்தப்படுவதற்கு முன்பே வெளியிடப்பட்டு விட்டதால், எஞ்சியுள்ளவர்களுக்கு தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த அனுமதி அளிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் விபு நய்யார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமாருக்கு அவசர கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அனுப்பி முடிவு தெரிவிப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தாலும் நடத்தை விதிகள்அமலில் இருக்கும் வரை, ஆசிரியர் பணிநியமன பணிகளை தொடரவோ, தேர்வுமுடிவை வெளியிடவோ இயலாது என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog