அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில், 90 சதவீதம், விரிவுரை யாளர் பணியிடங்கள் காலி! 

"அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில், 90 சதவீதம், விரிவுரை யாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன' என, ஆசிரியர் சங்க கூட்டமைப்பினர் தெரிவித்தனர். காரைக்குடியில், அரசு மற்றும் உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள், ஆசிரியர் சங்க கூட்டமைப்பு சார்பில், ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடந்தது. 

பொதுச் செயலர் தினகரன் கூறியதாவது: தமிழகத்தில், 41, அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும், 35, உதவி பெறும் பாலிடெக்னிக்குகளும் உள்ளன; 40 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். 150க்கும் மேற்பட்ட, துறைத் தலைவர், பணியிடம் காலியாக உள்ளது. தமிழகம் முழுவதிலும், தற்போது, ஆறு, துறைத் தலைவர்கள் மட்டுமே உள்ளனர். மற்றவர்கள், பொறுப்பு அடிப்படையில், பணியாற்றி வருகின்றனர். 

1 : 20 என்ற அளவில், ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட வேண்டும்; ஆனால், தற்போது, 1 : 110 என்கிற அளவில், ஆசிரியர்கள் உள்ளனர். பாலிடெக்னிக்குகளில், 90 சதவீதம், பகுதி நேர ஆசிரியர்கள் தான் உள்ளனர். இவர்கள், 15 ஆண்டுகளாக, சம்பள உயர்வின்றி தவிக்கின்றனர். தேர்வுப் பணியில் ஈடுபடும், ஆசிரியர்களுக்கு, ஒரு பேப்பருக்கு, 7,000 ரூபாய் மதிப்பூதியமாக வழங்கப்படுகிறது. இதை உயர்த்தி தரக்கோரி, கடந்த ஆண்டு, ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோம். 

அரசு, பேச்சுவார்த்தை நடத்தி, உயர்த்தி வழங்குவதாக அறிவித்தது; ஆனால், உயர்த்தவில்லை. இதற்கான தொகையை, உயர்த்தி வழங்காவிட்டால், இந்த ஆண்டும், தேர்வுப் பணியைப் புறக்கணிப்போம். தொழில்நுட்ப கல்வி இயக்ககம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவை, பாலிடெக்னிக்குகளை கண்டு கொள்வது கிடையாது. 

கடந்த, 2008ல், நியமிக்கப்பட்ட விரிவுரையாளர்களுக்கு, ஐந்து ஆண்டுகளாகியும், பணி வரன்முறை செய்யப்படவில்லை. அதற்கு முன், சேர்ந்தவர்களுக்கு, பணி வரன்முறை செய்யப்பட்டும், தர ஊதியம் வழங்கப்படவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog