ஆசிரியர் தேர்வு மதிப்பெண் தளர்வு; அரைக் கிணறு தாண்டினால் போதாது : பாமக நிறுவனர் ராமதாஸ் 

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்கள் 5% குறைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். இது முழுமையான பயனை அளிக்காது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சிமதிப்பெண்கள் 60 விழுக்காட்டிலிருந்து 55 விழுக்காடாக குறைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். இது போதுமானதல்ல. கடந்த 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் சராசரியாக 5 விழுக்காட்டினர் கூட தேர்ச்சி பெற முடியாததற்கு அதிக அளவிலான தேர்ச்சி மதிப்பெண் தான் காரணம் ஆகும். 

இதைக் கணிசமாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில், வெறும் 5% மட்டும்குறைத்திருப்பது யானைப் பசிக்கு சோளப்பொறி போடுவதைப் போன்றதாகும்.சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால் அதை முழுமையாக செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல் பெயரளவுக்கு சலுகை வழங்குதல் போன்ற அரைக் கிணறு தாண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. 

எனவே, பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 45 விழுக்காடும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 40 விழுக்காடும், மாற்றுத்திறனாளிகளுக்கு 35 விழுக்காடும் தேர்ச்சி மதிப்பெண்களாக நிர்ணயிக்க வேண்டும். 

இதை கடந்த 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தகுதித்தேர்வுகளிலும் நடைமுறைப்படுத்தி, அதற்கேற்றவாறு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலை புதிதாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Comments

Popular posts from this blog