15,000 பி.எட்., பட்டதாரி ஆசிரியருக்கு அரசு பணி வழங்க கோரி மனு. 

தமிழகத்திலுள்ள வேலையில்லா கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி (பி.எட்.,) ஆசிரியர்கள் 15,000 பேருக்கு பள்ளிகளில், அரசு பணிவாய்ப்பு வழங்க வேண்டும்" என தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில், பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த வேலையில்லா கம்ப்யூட்டர் சயின்ஸ் (பி.எட்.,) ஆசிரியர்கள், தஞ்சையைச் சேர்ந்த பாலமுருகன் தலைமையில், 20க்கும் மேற்பட்டோர் நேற்று வந்தனர்.தொடர்ந்து இவர்கள் அளித்த மனுவை கலெக்டர் சுப்பையன் வேறு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்ததால், கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் பிரிவு அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். 

மேற்கண்ட கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: தமிழகளவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி ஆசிரியர்கள் (பி.எட்.,) படிப்பு முடித்து விட்டு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள் வாழ்வாதாரம் பாதித்து, குடும்பம் நடத்த வழியின்றி தவிக்கின்றனர்.அரசு பள்ளிகளில் கம்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு உள்ளது. இவற்றில் போதுமான காலிப்பணியிடங்கள் இருந்தும், அப்பணியிடத்தில் வேலையில்லா பட்டதாரிகளை பணி நியமனம் செய்யாமல், காலம்தாழ்த்தப்பட்டு வருகிறது.

அதனால் போதுமான கம்ப்யூட்டர் அறிவு இல்லாமலேயே மாணவ, மாணவியரும் மேற்படிப்பை தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆறாம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., வரை தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் புதிதாக உருவாக்கப்படும் என, அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. 

ஆனாலும், பாடப்பிரிவை உருவாக்காமல் உள்ளனர். நடப்பு 2014-15ம் கல்வியாண்டு முதல், கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தை பள்ளிகளில் கட்டாய பாடமாக அறிவித்து, வேலையின்றி தவிக்கும் 15 ,000 பட்டதாரி ஆசிரியர்களை (பி.எட்.,) அரசு பணியில் நியமிக்க வேண்டும். இத்தகைய கோரிக்கையை முதல்வர் ஜெ., நிறைவேற்றி, பணிவாய்ப்பின்றி தவிக்கும் 15,000பேர்களுக்கு, மறுவாழ்வு அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

Comments

Popular posts from this blog