ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி தகவல்*Daily Thanthi News


ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் விரைவில் சான்றிதழ் சரிபார்க்கப்படும் என்று ஆசிரியர் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர் தகுதி தேர்வு

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதிக்கான முதல் தாள்(இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள்) மற்றும் 2–வது தாள் தேர்வு(பட்டதாரிகள்) கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்றது. இந்த தேர்வுகளை 6 லட்சத்து 
62 ஆயிரம் பேர் எழுதினார்கள். அவர்களில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றனர். 

இந்த தேர்வில் சிலவினாக்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பதில்கள் சரியாக உள்ளன என்றும் சரியான விடைகளுக்கு மதிப்பெண் போடவில்லை என்றும் பலர் நீதிமன்றங்களை நாடினார்கள்.இதில் பல வழக்குகள் முடிந்துவிட்டன. சில வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன.எப்போது சான்றிதழ் சரிபார்க்கப்படும்? எப்போது ஆசிரியர் பணிக்கு தேர்ந்துஎடுக்கப்படுவோம்? எப்போது பணிநியமனம் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சான்றிதழ் சரிபார்ப்பு

தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்களா? எனறு கேட்டதற்கு கண்டிப்பாக தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் விரைவில் சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதி அறிவிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து ஆசிரியர் 
பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் எடுத்த மதிப்பெண், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2, ஆசிரியர் பயிற்சி ஆகியவற்றில் எடுத்த மதிப்பெண்களை வைத்தும் இட ஒதுக்கீட்டு அடிப்படையிலும் ஆசிரியர்கள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.

கோர்ட்டு தீர்ப்பு

நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வந்தபின்னர்தான் ஆசிரியர்கள் நியமனம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog