பணி நிரந்தரம் செய்து பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– ஆசிரியர்கள் கவலையின்றி இருந்தால் தான் மாணவர்களை இந்த நாட்டின் எதிர்காலத் தூண்களாக உருவாக்க முடியும். ஆனால்,தமிழக அரசின் தெளிவற்ற கொள்கைகளால் அனைத்துத் தகுதிகளையும் கொண்ட ஆசிரியர்கள் தினக்கூலி தொழிலாளர்களைவிட குறைந்த ஊதியம் பெற்று வாடிவருகின்றனர். தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் அரசு நடுநிலை,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி,ஓவியம்,கணினி,தையல் ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ்16,549பகுதி நேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 05.03.2012அன்று தமிழக அரசு பிறப்பித்த அறிவிக்கையின் அடிப்படையில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் நேர்காணல் மூலம் இவர்கள் பணியமர்த்தப்பட்டனர். இவர்கள் பகுதிநேர ஆசிரியர்கள் என்ற முறையில் குறைந்தபட்சம் வாரத்திற்கு3அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது என்றாலும்,அனைத்து பணி நாட்களிலும் முழு நேரமும் இவர்கள் பணியாற்றுகின்றனர். ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பள்ளிகளில் மற்ற பாடங்களை நடத்தும்படியும் பணிக்கப்படுகின்றனர். முழு நேர ஆசிரியர்களுக்குரிய அனைத்துப் பணிகளையும் செய்யும் போதிலும்,இவர்களுக்கு மாதம் ரூ.5,000மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. இது தினக்கூலி தொழிலாளர்களுக்கு கிடைக்கும் ஊதியத்தைவிட மிகவும் குறைவாகும். ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஜூன் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை மட்டுமே இவர்களுக்கு பணி வழங்கப்படுவதால் மே மாதத்திற்கு ஊதியம் கிடைப்பதில்லை. அதுமட்டுமின்றி,அரசு ஊழியர்களுக்குரிய எந்த சலுகையும் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. மேலும் பகுதி நேர சிறப்பாசிரியர்களில் பலர் மாவட்டம் விட்டு மாவட்டம் பணியமர்த்தப்பட்டிருப்பதால் அவர்கள் பெறும் ஊதியம் அவர்களின் உணவுக்கும்,தங்குமிடத்திற்கும் கூட போதுமானதாக இல்லை. தங்களை நிரந்தர ஆசிரியர்களாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஓராண்டாக பல்வேறு போராட்டங்களை சிறப்பாசிரியர்கள் மேற்கொண்டுவரும் போதிலும்,அவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை. மாறாக முழுநேர சிறப்பாசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை கடந்த08.05.2013அன்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இதன்படி தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணி நிலைப்பு உள்ளிட்ட அனைத்து சலுகைகளுடன்5200 – 20,200 +தர ஊதியம்2800என்ற விகிதத்தில் காலமுறை ஊதியம் வழங்கப்படவுள்ளது. ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பகுதி நேர சிறப்பாசிரியர்களும்,இப்போது தேர்ந்தெடுக்கப்படும் முழு நேர சிறப்பாசிரியர்களும் ஒரே கல்வித் தகுதி கொண்டவர்கள்,ஒரே மாதிரியான முறையில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்,கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பணி செய்பவர்கள். ஆனால்,ஒரு பிரிவினருக்கு மாதம்5000ரூபாயும்,இன்னொரு பிரிவினருக்கு மாதம் சுமார்20,000ரூபாயும் வழங்குவது சரியா?சமநீதியா?என்பதை அரசு சிந்திக்க வேண்டும். பகுதி நேர சிறப்பாசிரியர்களின் குடும்ப நலனையும்,வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு அவர்கள் அனைவருக்கும் பணி நிலைப்பு வழங்க வேண்டும். இவர்களில் தகுதியுடையவர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு,போட்டித் தேர்வு நடத்தி பட்டதாரி ஆசிரியர்களாகவோ அல்லது முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாகவோ நியமிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை நாளை தொடங்கவிருக்கும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog