ஆசிரியர் தகுதித்தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயம்: தமிழக அரசுக்கு எதிரான மனு: சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி 

ஆசிரியர் தகுதித் தேர்வில், தமிழக அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணுக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சுப்ரீம் கோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசின் சார்பில், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. 

அரசு குறிப்பிட்டுள்ள அடிப்படை தகுதியுள்ள நபர்கள், இந்த தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதின் மூலம், அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பை பெறலாம். தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் இந்த தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற, குறைந்தபட்சம், 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற வேண்டும் என, மாநில அரசு தெரிவித்துள்ளது. 

மாநில அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் பெற்றவர்களே, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவார்கள் என, அரசு அறிவித்துள்ளது. மாநில அரசின் இந்த முடிவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், மாநில அரசின் குறைந்தபட்ச மதிப்பெண் அறிவிப்பு சட்ட விரோதமானது என்றும், மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.

 இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஏ.கே.சிக்ரி தலைமையிலான சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், தமிழக அரசின் முடிவுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், தகுதித் தேர்வுகளில் குறைந்தபட்ச மதிப்பெண்களை நிர்ணயிப்பது மாநில அரசின் உரிமை என்றும், இதில் சுப்ரீம் கோர்ட் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் கூறினர். இதையடுத்து, தமிழக அரசுக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog