அதிர்ச்சி அளிக்கும் தேர்வு முடிவு - தமிழ் முரசு

தமிழகத்தில் ஆசிரியர்களின் நிலை என்ன என்பதை ஒரு சாம்பிள் போல் நேற்று வெளியான தகுதித் தேர்வு முடிவுகள் வெளிக்காட்டுகின்றன. அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்று கடந்த 2010ம் ஆண்டில் அரசு உத்தரவிட்டது. 

இதையடுத்து, அதே ஆண்டில் முதல் முறையாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. ஏராளமான ஆசிரியர்கள் தேர்வை எழுதினாலும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் தேர்ச்சி விகிதம் இருந்தது. இந்த ஆண்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு(தாள் 1) தனியாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு(தாள் 2) தனியாகவும் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. முதல்தாள் தேர்வு ஆகஸ்ட் 17ம் தேதி 687 மையங்களில நடந்தது. தாள் 2க்கான தேர்வு ஆகஸ்ட் 18ம் தேதி 1070 மையங்களில் நடந்தது. 

இரண்டு தேர்வுக்கான கீ-ஆன்சர் ஆகஸ்ட் 27ம் தேதி வெளியிடப்பட்டது. பின்னர், கேள்வித்தாள் மற்றும் விடைகள் குறித்து ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கும்படி வாரியம் அறிவித்திருந்தது. இதைதொடர்ந்து நேற்று மாலை தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை 2 லட்சத்து 62,187 பேர் எழுதினர். அதில் 12,596 பேர் 60 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் வெறும் 4.8 மட்டுமே. 

புதுச்சேரியில் தாள் 1ல் மொத்தம் 3857 பேர் எழுதினர். 181 பேர் 60 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி வீதம் 4.69. பட்டதாரிகளுக்கான தகுதி தேர்வை 4 லட்சத்து 311 பேர் எழுதினர். அவர்களில் 14,496 பேர் 60 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்ச்சி வீதம் வெறும் 3.62. புதுச்சேரியில் பட்டதாரி தேர்வில் மொத்தம் 4,314 பேர் எழுதினர். அவர்களில் 58 பேர் மட்டுமே 60 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 1.4 மட்டுமே. 

கடந்த 2010ம் ஆண்டுக்கு பின்பு வேலையில் சேர்ந்த ஆசிரியர்களும், புதிதாக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களும் எழுதிய தேர்வில்தான் இந்த அதிர்ச்சிகரமான முடிவு. எனவே ஆண்டுதோறும் தகுதி தேர்வை நடத்தினால் மட்டும் போதாது. தகுதி தேர்வின் அடிப்படை சரியில்லையா அல்லது ஆசிரியர்களின் கல்வித் தரம் மிக மோசமாக உள்ளதா என்பதை கல்வித் துறை ஆராய வேண்டும்.

Comments

Popular posts from this blog