தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான ஆறரை லட்சம் பேர் எழுதிய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

 6.62 லட்சம் பேர் எழுதினர் இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகள் நடத்தப்பட்டன. முதல் தாள் தேர்வை இரண்டு லட்சத்து 62 ஆயிரத்து 187 பேர் எழுதினர். இரண்டாம் தாள் தேர்வை 4 லட்சத்து 311 பேர் எழுதினர். அந்த வகையில் தமிழகத்தில் இரண்டு தாள்களையும் 6 லட்சத்து 62 ஆயிரத்து 498 பேர் எழுதினர். 

முதல் தாள் தேர்ச்சி விவரங்கள் 

முதல் தாள் எழுதிய இரண்டு லட்சத்து 62 ஆயிரத்து 187 பேரில் ஆண்கள் 63 ஆயிரத்து 717 பேர், பெண்கள் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 470 பேர். இவர்களில் 12 ஆயிரத்து 596 பேர், 60 சதவீதம் மார்க்குக்கு மேல் (தேர்ச்சிக்கான மதிப்பெண்) பெற்றுள்ளனர்.முதல் தாள் தேர்வு எழுதியவர்களில் 4.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களில் இரண்டாயிரத்து 908 பேர் (4.56 சதவீதம்) ஆண்கள்; 9 ஆயிரத்து 688 பேர் (4.88 சதவீதம்) பெண்கள். முதல் தாளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், உருது, கன்னடா ஆகிய மொழிக்கான தேர்வு நடத்தப்பட்டன. தமிழ் தேர்வில் இரண்டு லட்சத்து 58 ஆயிரத்து 990 பேர் (ஆண்கள் 62 ஆயிரத்து 190, பெண்கள் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 800) பங்கு பெற்றனர். அவர்களில் 12 ஆயிரத்து 433 பேர் (ஆண்கள் 2,823, பெண்கள் 9,610) 60 சதவீதம் மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர். 

 இரண்டாம் தாள் தேர்ச்சி விவரங்கள் 

இரண்டாம் தாளை எழுதிய 4 லட்சத்து 311 பேரில், ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 954 பேர் ஆண்கள், இரண்டு லட்சத்து 84 ஆயிரத்து 357 பேர் பெண்கள். இவர்களில் 14 ஆயிரத்து 496 பேர் 60 சதவீதத்துக்கும் மேல் மார்க் எடுத்து தேர்ச்சி அடைந்தனர். தேர்ச்சி அடைந்துள்ள 14,496 பேரில், 4,835 பேர் ஆண்கள், 9,661 பேர் பெண்கள். இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதம் 3.62 ஆகும். ஆண்கள் 4.16 சதவீதம், பெண்கள் 3.39 சதவீதம் பேர் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டு தாள்களையும் எழுதிய 6 லட்சத்து 62 ஆயிரத்து 498 பேரில், 27 ஆயிரத்து 92 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் சதவீதம் 4.21 ஆகும். 

 புதுச்சேரி தேர்வுகள் 

புதுச்சேரிக்கான முதல் மற்றும் இரண்டாம் தாள்களை 7 ஆயிரத்து 991 பேர் எழுதினர். முதல் தாளை 3 ஆயிரத்து 857 பேரும் (642 ஆண்கள், 3,215 பெண்கள்), இரண்டாம் தாளை 4 ஆயிரத்து 134 பேரும் (875 ஆண்கள், 3,259 பெண்கள்) எழுதினர்.முதல் தாளை எழுதிய 3,857 பேரில் 181 பேர், 60 சதவீதம் மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று தேர்ச்சி அடைந்தனர். தேர்ச்சி அடைந்த 181 பேரில் 28 பேர் ஆண்கள் (4.36 சதவீதம்), 153 பேர் பெண்கள் (4.75 சதவீதம்). அந்த வகையில் முதல் தாளை எழுதியவர்களில் மொத்தம் 4.69 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

 இரண்டாம் தாளை எழுதிய 4,134 பேரில், 58 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 7 பேர் ஆண்கள் (0.08 சதவீதம்), 51 பேர் பெண்கள் (1.56 சதவீதம்). இரண்டாம் தாளை எழுதியவர்களில் 1.40 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. குறைவான தேர்ச்சி இதுவரை மூன்று முறை ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டுள்ளது. மூன்று தேர்வுகளிலும் தேர்ச்சி விகிதம் சற்று உயர்ந்து வருகிறது. 

முதன்முதலாக நடந்த தேர்வில் 0.36 சதவீதம் பேரும், இரண்டாம் முறை நடந்த தேர்வில் 2.99 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்தனர். தற்போது நடந்துள்ள மூன்றாம் தேர்வில் 4.21 சதவீதம் பேர் பாஸ் செய்துள்ளனர். ஆனால் தேர்வு எழுதிய ஆறரை லட்சம் பேரில் 27 ஆயிரத்து 92 பேர் மட்டுமே பாஸ் செய்திருப்பது குறைவான தேர்ச்சிதான் என்று கல்வியாளர்கள் குறிப்பிட்டனர்.

Comments

Popular posts from this blog