மத்திய அரசு மாதிரி பள்ளி திட்டம் தமிழக அரசு ஏற்று நடத்த கல்வியாளர்கள் வலியுறுத்தல்.

நாடு முழுவதும் 2500 தேசிய மாதிரி பள்ளிகளை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 356 பள்ளிகள் தனியார் பங்களிப்புடன் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்புமற்றும் கல்வித்தரத்துடன் கூடிய இத்தகைய பள்ளிகளை தனியார் துறையினருடன் இணைந்து தொடங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது கல்வியாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேசிய மாதிரி பள்ளிகளை தொடங்க மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வகுத்துள்ள விதிமுறைகள் அனைத்தும் தனியாருக்கு சாதகமாகவே உள்ளன. மாதிரி பள்ளிகளை அமைப்பதற்கு தேவையான 3 ஏக்கர் நிலத்தை மாநில அரசிடமிருந்து மானிய விலையில் வாங்குவதோ அல்லது குத்தகைக்கு எடுப்பதோ மட்டும்தான் தனியார் நிறுவனங்கள் செய்ய வேண்டியதாகும்.

கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் தொடங்கி,பராமரிப்பு வரை செலவில் பெரும்பகுதியை மத்திய அரசே வழங்குகிறது. அதேநேரத்தில்,6 முதல் 12 ஆம் வகுப்பு வரை கொண்ட இப்பள்ளிகளில் அரசு ஒதுக்கீட்டில் வகுப்புக்கு 140 பேர் வீதம் 980 மாணவர்களை மட்டும் சேர்க்கலாம். நிர்வாக ஒதுக்கீட்டில் வகுப்புக்கு 210 பேர் வீதம் மொத்தம் 1470 மாணவர்களை சேர்க்க தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

அதற்கான கட்டணத்தை ஒழுங்குபடுத்துவது குறித்தும் தெரிவிக்கப்படாததால் கல்விக் கொள்ளை நடைபெற வாய்ப்புள்ளது. இத்தகைய பள்ளிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு மட்டுமே மத்திய அரசு நிதி உதவி வழங்கப்படும். அதன்பின் தனியார் நிறுவனங்கள்தான் சொந்தமாக பள்ளிகளை நடத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதனால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இவை பெற்றோரிடம் இருந்து பணம் பிடுங்கும் வழக்கமான தனியார் பள்ளிகளாகிவிட வாய்ப்பிருக்கிறது.

மாநில அரசுகளின் அதிகாரத்தில் குறுக்கிடும் வகையிலும்,கல்வியை தனியார் மயமாக்கும் வகையிலும் அமைந்துள்ள இத்திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 356 மாதிரி பள்ளிகளை தமிழக அரசே நடத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Comments

Popular posts from this blog