ஆசிரியர் பற்றாக்குறை: அரசு பள்ளிகளில் பூட்டப்பட்ட கம்ப்யூட்டர் லேப்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பற்றாக் குறையால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 2,000த்துக்கும் மேற்பட்ட, அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஐ.டி., துறையின் மீதான மோகத்தில், மாணவ, மாணவியர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு படிக்க ஆர்வம் காட்டியதால், அனைத்து பள்ளிகளிலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு துவக்கப்பட்டது. இதற்காக எல்காட் மூலம், கம்ப்யூட்டர் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன. கம்ப்யூட்டர் ஆசிரியர்களும், ஒப்பந்த அடிப்படையில், எல்காட் மூலமாகவே, நியமிக்கப்பட்டனர். இவர்களை நிரந்தர அரசுப் பணிக்கு மாற்றும் வகையில், சிறப்பு தேர்வுகளும் நடத்தப்பட்டன. 

இதில், தேர்ச்சி பெறாதவர்களையும், சலுகை அடிப்படையில், நிரந்தரமாக்கி உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட், "தேர்ச்சி பெறாதவர்களை, உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும்" என, உத்தரவிட்டது. 

 அதனால், இரு மாதங்களுக்கு முன், 500க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதன்பின், கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிநியமனம் இதுவரை நடக்கவில்லை. இந்நிலையில், பல பள்ளிகளில், கம்ப்யூட்டர் லேப் பூட்டப்பட்டு, உபயோகிக்கப்படாமல் உள்ளது. இதனால், அந்த உபகரணங்கள் வீணாவதுடன், மாணவ, மாணவியரின் கல்வித்தரமும் கேள்விக் குறியாகியுள்ளது.

 இதுதொடர்பாக, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடம், ஒரு பள்ளிக்கு ஒன்று என்ற விகிதத்தில் மட்டுமே இருந்தது. அதில், இருந்தவர்களும் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், கம்ப்யூட்டர் மற்றும் அதுசார்ந்த உபகரணங்களை மாணவர்களுக்கு பயன்படுத்த அனுமதிக்க முடியாத நிலை உருவானது. 

வேறு ஆசிரியர்களும் பொறுப்பேற்க முடியாது என்பதால், கம்ப்யூட்டர் பாடம் நடத்துவதும், லேப் பயன்படுத்துவதும், பெரும்பாலான பள்ளிகளில் முடியாததாக உள்ளது. தற்காலிக ஆசிரியர்களை நம்பி, பல லட்சம் மதிப்பிலான லேபை ஒப்படைக்க முடியாது என்பதால், உடனடியாக கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Comments

Popular posts from this blog