நெட் தேர்வில் தகுதி மதிப்பெண் யுஜிசி நிர்ணயிக்க அதிகாரம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

விரிவுரையாளர்களுக்கான தேசிய தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை நிர்ணயிக்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2012 ஜூன் 24-ம் தேதி நடைபெற்ற நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு முன்னதாக யு.ஜி.சி. தகுதி மதிப்பெண்ணை நிர்ணயம் செய்து முடிவுகளை வெளியிட்டது.மொத்தம் 5 லட்சம் பேர் எழுதிய இத்தேர்வில் 2 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

அவர்களில் ஒவ்வொரு பாடத்திலும் முற்பட்ட வகுப்பினருக்கு 65 சதவீத மதிப்பெண்ணும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 60 சதவீத மதிப்பெண்ணும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 55 சதவீத மதிப்பெண்ணும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்பட்டது.அதன்படி, 43,974 பேர் விரிவுரையாளராகும் தகுதியைப் பெற்றனர்.

ஒருசில பாடங்களில் மிகக் குறைந்த அளவிலான மாணவர்களே தேர்ச்சியடைந்துள்ளதால் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என கோரிக்கைகள் யு.ஜி.சி.க்கு வந்தன.இதுதொடர்பாக பரிசீலித்த நிபுணர் குழு, மேற்கண்ட குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் பெற்றவர்களையோ அல்லது தேர்ச்சி பெற்றவர்களில் முதல் 7 சதவீதத்தினரையோ விரிவுரையாளர்களாக பணியாற்றும் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கலாம் என பரிந்துரைத்தது.

இதனடிப்படையில், நெட் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் கூடுதல் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் சுமார் 15 ஆயிரம் பேர் இடம்பெற்றிருந்தனர். மொத்தமாக இந்தத் தேர்வில் 57 ஆயிரம் பேர் விரிவுரையாளராகும் தகுதியைப் பெற்றனர்.

இந்த நிலையில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் நிர்ணயிப்பதை எதிர்தது நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.இந்த மனுக்களை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் மற்றும் பம்பாய் உயர்நீதிமன்ற நாக்பூர் கிளை ஆகியவை நெட் தேர்வில்தேர்ச்சி பெற்றவர்களுக்கான தகுதி மதிப்பெண்ணை நிர்ணயிக்கும் அதிகாரம் யு.ஜி.சி.க்கு இல்லை என தெரிவித்தன.மேலும் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரையும் விரிவுரையாளர் பணிக்கு தகுதி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என யு.ஜி.சி.க்கு உத்தரவிட்டன.

இதை எதிர்த்து யு.ஜி.சி. தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த மனு நீதிபதி கே.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.மனுக்களை விசாரித்த பிறகு நீதிபதி வழங்கிய தீர்ப்பு:கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் விரிவுரையாளர்களாகப் பணியாற்றுவோருக்கான தகுதியை நிர்ணயிக்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு அதிகாரம் உள்ளது.

இந்தத் தேர்வுக்கான யு.ஜி.சி.யின் அறிவிப்பாணையில் நெட் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே முடிவுகளை வெளியிடுவதற்கு முன் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என குறிப்பிடப்படுள்ளது. தேர்ச்சி பெறுபவர்கள் தகுதி பெறுவார்கள் எனக் குறிப்பிடவில்லை.தேர்ச்சி செய்வதன் மூலம் மட்டுமே அவர்கள் பரிசீலனை செய்யப்படும் வட்டத்துக்குள் வருகிறார்கள். பரிசீலனை செய்வது என்றால் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை நிர்ணயிப்பது என்றுதான் அர்த்தம்.

உயர் கல்வியின் தரத்தைப் பாதுகாப்பதற்காகவே நிபுணர்களின்பரிந்துரையின் அடிப்படையில் குறைந்தபட்ச தகுதியை யுஜிசி நிர்ணயம் செய்துள்ளது. இதை நிர்ணயிக்க யுஜிசிக்கு அதிகாரம் உள்ளது.எனவே, இதை சட்ட விரோதமல்ல. உயர் நீதிமன்றத்தின் உத்தரவு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog