தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த இயலாது: உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதில்

எழுத்துப் பிழைகளுடன் கேள்வித்தாள் இருந்த முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு, மறுதேர்வு நடத்த இயலாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆசிரியர் தேர்வு வாரியம் செவ்வாய்க்கிழமை பதில் தெரிவித்தது.

முதுகலைப் பட்டதாரி ஆசிரியருக்கான போட்டித் தேர்வில், தமிழ்ப் பாடத்துக்கான பி வரிசை கேள்வித் தாளில் 47 எழுத்துப் பிழைகள் இருந்தன. பிழையான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் அளிக்க வேண்டும் அல்லது மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இவ்வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, பிழையான 40 கேள்விகளையும் நீக்கி விடுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது. அதை ஏற்க மறுத்த நீதிபதி எஸ்.நாகமுத்து, மறுதேர்வு நடத்துவது குறித்து அரசின் கருத்தை தெரிவிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்கள் அறிவொளி, தங்கமாரி ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் கே.செல்லபாண்டியன் வாதிடுகையில், பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை விரைவில் பூர்த்தி செய்ய வேண்டியது அவசியமாகிறது. மறுதேர்வு நடத்துவதால் மேலும் காலதாமதம் ஏற்படும். இதனால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவர். 40 கேள்விகள் பிழையாக இருப்பதால், அவற்றை நீக்கிவிட்டு, மொத்த மதிப்பெண் 150 என்பதற்குப் பதிலாக 110 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்யலாம் என்று குறிப்பிட்டார்.

இதுதான் உங்களது நிலைப்பாடா என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, மூன்றில் ஒரு பங்கு கேள்விகள் பிழையாக இருக்கும் நிலையில் அக் கேள்விகளையெல்லாம் நீக்கிவிட்டு 110 மதிப்பெண்களுக்கு மட்டும் மதிப்பீடு செய்யலாம் என்பது ஏற்புடையதல்ல. அதேபோல, பிழையான கேள்விக்குப் பதில் அளித்தவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்கலாம் என்பது, ஓரிரு கேள்விகள் தவறாக இருக்கும் தேர்வுக்குத் தான் பொருத்தமாக இருக்கும் என்றார்.இத் தேர்வைப் பொருத்தவரை ஆசிரியர் தேர்வு வாரியம் பொறுப்பு இல்லாமல் நடந்திருப்பதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதி, பிழையான கேள்விகளுடன் நடந்த தேர்வுகள் தொடர்பான பல்வேறு வழக்குகளின் உத்தரவுகளைச் சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்குகள் அனைத்திலும் குறைந்த எண்ணிகையிலேயே பிழைகள் இடம் பெற்றிருக்கின்றன. இதன் இறுதி உத்தரவு புதன்கிழமை பிறப்பிக்கப்படும். இதேபோன்ற முந்தைய வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து இருப்பதும் கவனத்தில் கொள்ளப்படும் என்றார்.

Comments

Popular posts from this blog