வினாத்தாள் பிழை: தமிழாசிரியர் நியமனத்திற்கு மறுதேர்வா : ஐகோர்ட் உத்தரவு

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணி நியமனத்திற்கு நடந்த தேர்வில், அச்சுப்பிழையுள்ள கேள்விகளுக்கு, முழு மதிப்பெண் கோரி தாக்கலான வழக்கில், மறுதேர்வு நடத்துவது குறித்து, அரசுத் தரப்பில் விவரம்
தெரிவிக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

மதுரை, புதூர், விஜயலட்சுமி தாக்கல் செய்த மனுவில், "முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள், 605 பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், ஜூலை 21ல் தேர்வு நடந்தது. "பி' வரிசை வினாத்தாளில், 47 கேள்விகளில் அச்சுப்பிழைகள் உள்ளன. அச்சுப்பிழை கேள்வி, விடைகளுக்கு, முழு மதிப்பெண் வழங்க வேண்டும். தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும்' என, குறிப்பிட்டார். "தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்கப்படுகிறது; டி.ஆர்.பி., தலைவர் ஆஜராக வேண்டும்' என, ஏற்கனவே நீதிபதி உத்தரவிட்டார்.

இதுபோல், திருச்சி, அந்தோணி கிளாராவும் மனு செய்தார். நீதிபதி எஸ்.நாகமுத்து முன், நேற்று இம்மனுக்கள் விசாரணைக்கு வந்தன. மனுதாரர்களின் தரப்பில் வழக்கறிஞர்கள், ஜெயகுமாரன், லஜபதி ராய் மற்றும் டி.ஆர்.பி., தலைவர் விபு நய்யார், உறுப்பினர் செயலர்கள் அறிவொளி, தங்கம்மாள் ஆஜராயினர். டி.ஆர்.பி., சார்பில், "மொத்தம் 150 வினாக்களில், 40 வினாக்கள் பிழையாக உள்ளன. பிழையான வினாக்களை நீக்கி விடுகிறோம். மீதம், 110 வினாக்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி கூறியதாவது: அனைத்து வழக்குகளிலும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என, கோர்ட் உத்தரவிடுவதில்லை. இதுபோன்ற முக்கிய வழக்குகளில் ஆஜராக, ஏற்கனவே கோர்ட் உத்தரவிட்டும், டி.ஆர்.பி., தலைவர் ஆஜராகவில்லை. கோர்ட் உத்தரவை பின்பற்ற வேண்டும் என, உங்களுக்கு தெரியாதா?

தமிழாசிரியர் நியமன தேர்வு வினாத்தாளில் பிழை ஏற்பட்டிருப்பது, துரதிஷ்டவசமானது. தமிழாசிரியர் பணிக்கு 31,983 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இதில், 8,002 பேருக்கு அச்சுப்பிழையுள்ள வினாத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளன. மூன்றில் ஒரு பங்கு வினாக்கள் பிழையாக உள்ளன. இம்மாதிரி சூழ்நிலையில் மறு தேர்வு நடத்த வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது, மனுதாரர்கள் பிரச்னை மட்டுமல்ல. பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மறு தேர்வு நடத்துவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி கூறினார்.

"மறு தேர்வு நடத்துவது பற்றி முடிவெடுக்கும் அதிகாரம், டி.ஆர்.பி., தலைவருக்கு இல்லை' என, அரசு வழக்கறிஞர் தெரிவித்ததை அடுத்து, "மறுதேர்வு நடத்துவது குறித்து அரசிடம் விவரம் பெற்று, செப்., 24ல், தெரிவிக்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.

Comments

Popular posts from this blog