மூன்றாவது முறையாக, இன்றும், நாளையும்நடக்கும் டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல், இரு தேர்வுகளில், 3 சதவீதத்தை தாண்டாத தேர்ச்சி சதவீதம், இந்த தேர்வில், 7 சதவீதமாக அதிகரிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், 7 லட்சம் பேரில், குறைந்தபட்சம், 50 ஆயிரம் பேர், தேர்ச்சி பெறலாம்.
முதல் தேர்வு:
கடந்த ஆண்டு, ஜூலையில் நடந்த, முதல் டி.இ.டி., தேர்வை, 6.67 லட்சம் பேர் எழுதினர். இதில், வெறும், 0.33 சதவீதம்பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதாவது, முதல் தாள் தேர்வில் (இடைநிலை ஆசிரியர்), 1,735 பேரும், இரண்டாம் தாள் தேர்வில் (பட்டதாரி ஆசிரியர்), 713 பேரும் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். ஒரு சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி பெற்றது, தேர்வர் மத்தியில், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேள்வித்தாள் கடினமாகஅமைந்ததும், தேர்வுக்கு ஒன்றரை மணி நேரம் மட்டுமே வழங்கியதும் தான், தேர்ச்சி குறைவுக்கு காரணம் என, தேர்வர்கள் குற்றம் சாட்டினர். பல தரப்பில் இருந்தும், விமர்சனம் எழுந்ததால், கடந்த ஆண்டு, அக்டோபர், 14ல் நடந்த டி.இ.டி., மறுதேர்வுக்கு, ஒன்றரை மணி நேரத்தை, மூன்று மணி நேரம் வழங்கியதுடன், கேள்வித்தாள் மிகக் கடினமாக இல்லாத வகையிலும், டி.ஆர்.பி., பார்த்துக் கொண்டது.
இரண்டாவது தேர்வு:
இதன் காரணமாக, தேர்ச்சி சதவீதம், ஓரளவுக்கு நன்றாக இருக்கும் என, டி.ஆர்.பி., எதிர்பார்த்தது. அதைப்போலவே, அந்த தேர்வில், 3 சதவீதம் பேர், தேர்ச்சி பெற்றனர். முதல் தாள் தேர்வில், 10, 397 பேரும், இரண்டாம் தாள் தேர்வில், 8,849 பேரும் தேர்ச்சிபெற்றனர். இந்த, 19, 246 பேரும், நிர்ணயிக்கப்பட்ட, 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றனர். இந்நிலையில், மூன்றாவது டி.இ.டி., தேர்வு, இன்றும், நாளையும் நடக்கிறது. இன்று காலை, 10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை நடக்கும் முதல் தாள் தேர்வை, 2,67,957பேரும், நாளைய தேர்வை, 4,11,635 பேரும் எழுதுகின்றனர். இன்றைய தேர்வு,677 மையங்களிலும், நாளைய தேர்வு, 1,060 மையங்களிலும் நடக்கின்றன.
"ரிசல்ட்' எகிறும்?
முதல் தேர்வை விட, இரண்டாவதாக நடந்த தேர்வில், டி.ஆர்.பி., எதிர்பார்த்ததைப் போல், தேர்ச்சி சதவீதம் அதிகரித்தது. இன்றும், நாளையும் நடக்கும் மூன்றாவது தேர்வில், 4 சதவீதம் வரை, தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கலாம் என, டி.ஆர்.பி., எதிர்பார்க்கிறது.
இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறியதாவது: முதல் முறையாக தேர்வு எழுதியவர்கள், தேர்வு எப்படி இருக்குமோ என, பதட்டப்பட்டனர். கேள்வித்தாள் கடினமாக அமைந்ததும், நேரம் குறைவாக இருந்ததும், தேர்ச்சியை குறைத்துவிட்டது. முதல் தேர்வில் கிடைத்த அனுபவம் காரணமாக, கேள்விகள் எப்படி வரும் என்பதை, தேர்வர்கள், நன்றாக புரிந்துகொண்டனர்.இதனால், இரண்டாவது தேர்வில், தேர்ச்சிஅதிகரித்தது. இரு தேர்வுகளை எழுதியவர்கள் தான், மூன்றாவது தேர்வையும், அதிகளவில் எழுதுகின்றனர்.புதிதாக தேர்வு எழுதுபவர்கள் எண்ணிக்கை குறைவு தான். எனவே, இரு தேர்வுகளில் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில், தேர்வை, நன்றாக எழுதுவர் என, எதிர்பார்க்கிறோம். கேள்வி அமைப்புகளும், தேர்வர்களை, மிரட்டும் வகையில் இருக்காது. இரண்டாவது தேர்வில், கேள்விகள் எப்படி அமைந்தனவோ, அப்படித்தான், இந்தமுறையும் இருக்கும். எனவே, 50 ஆயிரம் பேர் வரை, தேர்ச்சி பெறலாம் என, நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
டி.இ.டி., தேர்வு முடிவை, தனியார் பள்ளிகள், ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. எட்டாம் வகுப்பு வரை, டி.இ.டி., முடித்தவர்கள் தான், ஆசிரியர்களாக பணிபுரிய வேண்டும் என்பதால், பல பள்ளிகளில், ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடியாத நிலை உள்ளது. எனவே, அரசுப் பணிக்கு செல்பவர்கள் எண்ணிக்கை, 15 ஆயிரமாக இருந்தாலும், மற்றவர்கள், தனியார் கல்வி நிறுவனங்களில், வேலை வாய்ப்பை பெறுவதற்கு, டி.இ.டி., தேர்ச்சி, உதவியாக இருக்கும்.

Comments

Popular posts from this blog