நாளை டி.இ.டி., தேர்வு ஆரம்பம்: 73 சதவீதம் பேர் பெண்கள்

சென்னை: ஏழு லட்சம் பேர் பங்கேற்கும், டி.இ.டி., தேர்வு, நாளை துவங்குகிறது. நாளை நடக்கும் முதல் தாள் தேர்வை, 2.67 லட்சம் பேரும், நாளை மறுநாள், 18ம் தேதி நடக்கும், இரண்டாம் தாள் தேர்வை, 4.11 லட்சம் பேரும் எழுதுகின்றனர். தேர்வெழுதுவோரில், 73 சதவீதம் பேர், பெண்கள்.
இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டம் அமலுக்கு வந்தபின், "ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர், மத்திய அல்லது மாநில அரசுகள் நடத்தும் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்' என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தும் பொறுப்பை, டி.ஆர்.பி., ஏற்றுள்ளது. கடந்த ஆண்டு, இரு டி.இ.டி., தேர்வுகளை, டி.ஆர்.பி., நடத்தியது. முதல் தேர்வை, 7 லட்சம் பேர் எழுதிய போதும், வெறும், 3,000 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இரண்டாவதாக நடந்த தேர்வில், 19 ஆயிரம் பேர், தேர்ச்சி பெற்றனர்.
இந்நிலையில், மூன்றாவது டி.இ.டி., தேர்வு, நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது. நாளை காலை, 10:00 மணி முதல் பகல், 1:00 மணி வரை, இடைநிலை ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான முதல் தாள் தேர்வு நடக்கிறது. இத்தேர்வை, 2.67 லட்சம் பேர் எழுதுகின்றனர். 18ம் தேதி நடக்கும், பட்டதாரி ஆசிரியருக்கான இரண்டாம் தாள் தேர்வை, 4.11 லட்சம் பேர் எழுதுகின்றனர். தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும், முழுவீச்சில் செய்யப்பட்டிருப்பதாக, டி.ஆர்.பி., தலைவர், விபு நய்யார் தெரிவித்து உள்ளார்.
அவரது அறிவிப்பு:
தேர்வை, அமைதியான முறையில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட கலெக்டர்களுடன், ஆலோசனை நடத்தி, தேர்வை, சிறப்பான முறையில் நடத்துவதற்கு, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கலெக்டர்கள், மாவட்ட தேர்வுக்குழு தலைவராக செயல்படுவர். டி.ஆர்.பி., அதிகாரிகள், மண்டல அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கல்வித் துறைஇயக்குனர்கள், இணை இயக்குனர்கள், 32 பேர், மாவட்டத்திற்கு ஒருவர் வீதம், 32 மாவட்டங்களுக்கும், கண்காணிப்பு அதிகாரிகளாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.முதல் தாள் தேர்வுப் பணியில், 29 ஆயிரம் பணியாளர்களும், இரண்டாம் தாள் தேர்வுப் பணியில், 42 ஆயிரம் பணியாளர்களும் ஈடுபடுத்தப்படுவர். மாற்றுத்திறனாளிகள், தரைத்தளத்தில் தேர்வெழுத, ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கூடுதலாக, 30 நிமிடங்கள் பார்வையற்றவர்களுக்காக, வேறொருவர் தேர்வெழுதவும், இவர்களுக்காக, கூடுதலாக, 30 நிமிடங்கள் ஒதுக்கவும், ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தேர்வுக்கு வசதியாக, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உட்பட, அனைத்து வகை பள்ளிகளுக்கும், 17ம் தேதி, அரசு, விடுமுறை அறிவித்துள்ளது. இவ்வாறு, விபு நய்யார் தெரிவித்துள்ளார். ஆசிரியர் பணியை, பெண்கள் அதிகளவில் விரும்புகின்றனர். இதனால், ஆசிரியர் படிப்பு படிப்பவர்களில், பெண்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளனர். இதனால், டி.இ.டி., தேர்வை எழுதுவோரிலும், பெண்களே, அதிகமாக உள்ளனர். முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள், இரண்டிலும் சேர்த்து, 6.79 லட்சம் பேர், தேர்வை எழுதுகின்றனர். இவர்களில், ஆண்கள், 27 சதவீதமாகவும், பெண்கள், 73 சதவீதமாகவும் உள்ளனர்.

Comments

Popular posts from this blog