ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள் மோசடி: தருமபுரியில் பெண் உள்பட 6 பேர்கைது


வினாத்தாள் மோசடியில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டவர்கள் கணபதி, இளையராஜா, எஸ்தர், கிருஷ்ணப்பா, சந்திரசேகரன், அசோகன்.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான வினாத்தாளை முன்கூட்டியே தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 6 பேரை தருமபுரி மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடத்திய குரூப்-2 தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதைத்தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் அனைத்துப் போட்டித் தேர்வுகளின் போதும் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான வினாத்தாள்களை சிலர் சனிக்கிழமை தேர்வு தொடங்குவதற்கு முன்னதாகவே விநியோகிக்கப் போவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. மேலும்,ஒரு கும்பல் தன்னிடம் ரூ.5 லட்சம் தந்தால், தருமபுரிக்கு வந்து வினாத்தாள் தருவதாகக் கூறியதாக போலீஸில் தேன்கனிக்கோட்டை, சாரண்டஹள்ளியைச் சேர்ந்த அசோக்குமார்(35) புகார் அளித்தார்.

அதன்பேரில், தருமபுரியில் மாவட்டக் குற்றப் பிரிவு டிஎஸ்பி பரமேஸ்வரா தலைமையிலான 4 தனிப்படை போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கிருஷ்ணகிரி, சாந்திநகர் முதல் குறுக்குத் தெருவைச் சேர்ந்த கணபதி (35), அவரது மனைவி எஸ்தர் (30), ஒசூரைச்சேர்ந்த கிருஷ்ணப்பா (36), பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த இளையராஜா (34), ஒசூரைச் சேர்ந்த சந்திரசேகரன் (35), பாலக்கோடு, ஜக்கசமுத்திரத்தைச் சேர்ந்த அசோகன் ஆகியோர் காரில் வந்து நான்கு சாலை சந்திப்பில் சந்தேகத்துக்கிடமாக நிற்பது தெரிய வந்தது. 

இதையடுத்து, அவர்களைப் பிடித்து விசாரித்த போது அசோக்குமார் புகார் கூறிய நபர்கள் என்பது தெரிய வந்தது. அவர்கள் போலி வினாத்தாள்களை வைத்துக் கொண்டு வினாத்தாள் ஒன்றுக்கு ரூ.5 லட்சம் கேட்டு முன்பணமாக ரூ.2 லட்ம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

புகார் கூறிய அசோக்குமார், கர்நாடக மாநிலத்தில் ஆசிரியர் பயிற்சி முடித்தவராம். படிப்பு முடிந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு வந்து விவசாயம் செய்து வருகிறார்.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறுவதால் அதற்காகத் தயாராகி வந்தார். அப்போதுதான் இதேபோல, தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த ஒசூர், பஸ்தியைச் சேர்ந்த சந்திரசேகரன் அறிமுகம் கிடைத்ததாம். அவர்தான், வினாத்தாள் விற்பனை செய்யும் நபர்கள் குறித்து அசோக்குமாருக்கு தகவல் கொடுத்து, அந்தக் கும்பலுடன் சேர்ந்து வினாத்தாளை பெற்றுத்தர வந்திருந்தாராம்.

இந்த நிலையில், இவர்கள் போலீஸில் சிக்கினர். இவர்களிடம் உண்மையிலேயே வினாத்தாள் இருந்ததா?, வேறு ஏதேனும் போலியாகத் தயாரிக்ப்பட்ட வினாத்தாள்களை விற்பனை செய்தனரா என்பது தெரியவில்லை. 

தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. இந்தக் கும்பலிடம் இருந்து ரூ.7.80 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் விரைவாகச் செயல்பட்டு மோசடி கும்பலைக் கைது செய்த போலீஸாருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஸ்ரா கர்க் பாராட்டுத் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog