டி.இ.டி., தேர்வை வற்புறுத்தாமல் 94 பேருக்கு பணி நியமனம் வழங்க உத்தரவு
"ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில், 2010, ஆகஸ்ட்டில் பிறப்பித்த உத்தரவுக்கு முன் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்கள், ஆசிரியர்கள் தகுதித் தேர்வை எழுத வேண்டியதில்லை" என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
இலவச கட்டாய கல்வி சட்டம், 2010, ஏப்ரல் மாதம் அமலுக்கு வந்தது. இச்சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களை, ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் தான் நியமிக்க வேண்டும். தமிழக அரசும், இதற்கான உத்தரவை, 2011, நவம்பரில் பிறப்பித்தது.
இந்நிலையில், தமிழகத்தில், பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கான நடவடிக்கை துவங்கியது. "ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் தான், பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர்" என, 2011, நவம்பர் மாதம், பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த பலர், வழக்கு தொடுத்தனர். அதில், "தங்களுக்கு, ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்டது. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி, சான்றிதழ் சரிபார்ப்புமுடிந்துவிட்டதால், ஆசிரியர் தகுதித் தேர்வு இல்லாமல், தேர்ந்தெடுக்க வேண்டும்" என, கூறப்பட்டு உள்ளது.
இம்மனுக்களை, சென்னை ஐகோர்ட், கடந்த ஆண்டு மார்ச் மாதம், தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்த அப்பீல் மனு, கடந்த ஆண்டு ஜூலை,13ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி,ஐகோர்ட்டில், 70 பேர், மனுத் தாக்கல்செய்தனர். 24 பேர் தாக்கல் செய்த அப்பீல் மனுவும், நிலுவையில் இருந்தது. அம்மனுக்களில் கூறியிருப்பதாவது:
கடந்த, 2010, ஆகஸ்ட் மாதம், ஆசிரியர்கல்விக்கான தேசிய கவுன்சில், ஒரு அறிவிப்பாணையை வெளியிட்டது. இடைநிலைஆசிரியருக்கான குறைந்தபட்ச தகுதி, அதில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அதே அறிவிப்பாணையில், "இந்த அறிவிப்பாணை தேதிக்கு முன்பாக, ஆசிரியர் நியமன நடவடிக்கைகளுக்கு விளம்பரம் வெளியிடப்பட்டால், 2001, விதிமுறைகளின்படி, நியமனங்களை மேற்கொள்ள வேண்டும்" என, கூறப்பட்டு உள்ளது.
அந்த விதிமுறைகளில், ஆசிரியர் தகுதி தேர்வு பற்றி கூறப்படவில்லை. எனவே, தேசிய கவுன்சிலின் அறிவிப்பாணையின்படி, தகுதி தேர்வு எழுதாமல், பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க, எங்களுக்கு தகுதி உள்ளது. இவ்வாறு, மனுக்களில் கூறப்பட்டு உள்ளது.
மனுக்களை விசாரித்த நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்" பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள், பி.எட்., பட்டம் பெற்றுள்ளனர். பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதியுள்ளது. கடந்த, 2010, மே மாதம், சான்றிதழ் சரிபார்ப்புக்காக, சீனியாரிட்டி மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில், மனுதாரர்களின் பெயர்களை, வேலைவாய்ப்பு அலுவலகம் அனுப்பியுள்ளது.
மனுதாரர்கள் மற்றும் 32 ஆயிரம் பேர், சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டு, 2010, மே, 12ம் தேதி முதல், 2011, பிப்., 18ம் தேதி வரை, அனைத்து மாவட்டங்களிலும், சான்றிதழ்சரிபார்க்கும் பணி நடந்துள்ளது. மனுதாரர்களைப் பொறுத்தவரை, 2010, மே,12ம் தேதி முதல், 15ம் தேதி வரை, சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஆஜராகியுள்ளனர்.
எனவே, அன்றைய தேதியைப் பொறுத்தவரை, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதாமல், பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க, மனுதாரர்களுக்கு தகுதி உள்ளது. ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலின் விதிமுறைகளின்படி, 2010, ஆக., 23ம் தேதிக்கு முன் சான்றிதழ் சரிபார்ப்பை முடித்தவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத வேண்டிய அவசியம் இல்லை.
அப்படி இருக்கும்போது, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என, மனுதாரர்களுக்கு அரசு உத்தரவிட முடியாது. இந்த வழக்கைப் பொறுத்தவரை,2010, ஆக., 23ம் தேதிக்கு முன், ஆசிரியர் நியமன நடவடிக்கைகள் துவங்கிவிட்டன.
எனவே, 2001ம் ஆண்டு, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலின் விதிமுறைகளின்படி தான், நியமனம் நடக்க வேண்டும். இந்த விவரங்களுக்குள், ஐகோர்ட் தனி நீதிபதி மற்றும் "டிவிஷன் பெஞ்ச்" செல்லவில்லை.
இந்த வழக்கைப் பொறுத்தவரை, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வழங்கியவிதிவிலக்கின் அடிப்படையில், மனுதாரர்கள் உரிமை கோருகின்றனர். மனுதாரர்கள் கோரியுள்ள பணியிடங்கள்,தற்போது காலியாக இல்லை என, அட்வகேட் ஜெனரல் கூறியுள்ளார்.
எனவே, எதிர்காலத்தில் காலியிடங்கள் உருவாகும்போது, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என, வற்புறுத்தாமல், மனுதாரர்களை பணியில் நியமிக்க வேண்டும். இவ்வாறு,"டிவிஷன் பெஞ்ச்" உத்தரவிட்டு உள்ளது.
Comments
Post a Comment