ஜனவரி முதல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம்

சென்னை: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக, "பட்டதாரி ஆசிரியர்களுக்கு, கடந்த ஜனவரி, 18ம் தேதியை கணக்கிட்டு, இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வை வழங்கலாம்" என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
"பட்டதாரி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பதவியில் பணிபுரியும் பட்ட தாரி ஆசிரியர், எம்.எட்., - எம்.பில்., மற்றும் பிஎச்.டி., தகுதிகளை, கூடுதலாக பெற்றிருந்தால், இரண்டாவது ஊக்க ஊதியம் வழங்கலாம்" என கடந்த ஜன., 18ம் தேதியிட்ட அரசாணையில், தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், எந்த தேதியில் இருந்து ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பதை, அரசாணையில் கூறவில்லை. இதனால், 20 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர், ஊக்க ஊதிய உயர்வு பெற முடியாமல், அவதிபட்டு வந்தனர். இதுகுறித்த செய்தி,"தினமலர்&' நாளிதழில், கடந்த ஜூன், 12ம்தேதி வெளியானது.
இதைத் தொடர்ந்து, அரசாணையில் இருந்த குழப்பத்தை சரிசெய்து, பள்ளிக்கல்வி துறை செயலர் சபிதா, புதிய உத்தரவை வெளியிட்டு உள்ளார். கடந்த ஜனவரியில் வெளியிட்ட அரசாணையின்படி, பட்டதாரி ஆசிரியர்கள், எம்.எட்., அல்லது எம்.பில்., அல்லது பிஎச்.டி., பட்டம் பெற்றிருந்தால், அது, இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கான, உயர் கல்வி தகுதியாக கருதி, அரசாணை வெளியான தேதியில் இருந்து வழங்கலாம்.
ஒரு ஆசிரியரின் மொத்த பணிக் காலத்தில்,அதிகபட்சமாக, இரு ஊக்க ஊதிய உயர்வுகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், இந்த, இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கப்படுகிறது.இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலர், பேட்ரிக் ரைமாண்ட் கூறியதாவது: இந்த தெளிவான உத்தரவால், உயர் கல்வி தகுதியைஉடைய, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பயன் பெறுவர். தெளிவான உத்தரவு இல்லாததால், ஏழு மாதங்களாக, ஊதிய உயர்வை பெற முடியவில்லை.
தற்போது, இந்த பிரச்னை தீர்ந்து உள்ளது. முதுகலை ஆசிரியர், உயர் கல்வி தகுதி பெற்ற தேதியில் இருந்து, ஊக்க ஊதிய உயர்வு பெற, அரசு வழிவகை செய்துள்ளது. அதேபோல், உயர் கல்வி தகுதி பெற்ற தேதியில் இருந்து, ஊக்க ஊதிய உயர்வை அமல்படுத்த, அரசு முன்வர வேண்டும். இவ்வாறு, பேட்ரிக் கூறினார்.

Comments

Popular posts from this blog