ஆசிரியர் பணி நியமனத்தில் மோசடி தேர்வு வாரிய தலைவரை நீக்கம் செய்ய கோரிக்கை 

சென்னை, ஜூன் 10: ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய டிஇடி தேர்வில் இடஒதுக்கீடு மோசடி நடந்துள்ளது என்றும், அதனால் ஆசிரியர்தேர்வு வாரிய தலைவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

பேராசிரியர்கள் மார்க்ஸ், சிவக்குமார், திருமாவளவன் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களை சந்தித்து கூறியதாவது: கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக 19000 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பணியிடம் வழங்கப்பட்டது. அதில் மிகப்பெரிய இட ஒதுக்கீடு மோசடி நடந்துள்ளது. 

இதனால் தகுதியுள்ள 3 லட்சம் பேருக்கு விதிமுறைப்படி அளிக்க வேண்டிய ஆசிரியர் தகுதித் சான்று மறுக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு பெறவேண்டிய 15000 பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். தேசிய ஆசிரியர் கல்விக் கழகம்(என்சிடிஇ) விதிமுறைகள், நீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் அப்பட்டமாக மீறியுள்ளது. 

ஆசிரியர் பணி நியமனம் செய்யும்போது முறையாக தனி அறிவிப்பு வெளியிட வேண்டும். அதில் ஒவ்வொரு பாடத்துக்குமான காலி இடங்கள் எண்ணிக்கை, வகுப்பு இனவாரியாக ஒதுக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை, தேர்ந்தெடுக்கும் முறை ஆகியவை குறிப்பிட வேண்டும். ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த முறையானஅறிவிப்பும் செய்யாமல் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியுள்ளது. 

என்சிடிஇநெறிமுறைகளின்படி ஒவ்வொரு இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் தனித்தனி தகுதி மதிப்பெண் நிர்ணயிக்க வேண்டும். அதை ஆசிரியர் தேர்வு வாரியம் கடைபிடிக்கவில்லை. இட ஒதுக்கீடு மோசடி குறித்து நீதிமன்றம் கண்டித்த பிறகும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே சவுத்ரி, 19000 ஆசிரியர் பணி நியமனத்தின்போது, பொதுப் பிரிவின்அனைத்து இடங்களையும் முற்பட்ட சாதியினருக்கு தாரை வார்த்துள்ளார். 

எஸ்.சி, எஸ்டி பிரிவினருக்கு கிடைக்க வேண்டிய வேலை எண்ணிக்கையை குறைத்துள்ளார். இது மிகப்பெரிய இட ஒதுக்கீடு மோசடி. இதை செய்த ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே சவுத்ரியை உடனடியாக பணி நீக்கம் செய்யவேண்டும். 

அவர் மீது விசாரணை நடத்தி உரிய தண்டனை வழங்க வேண்டும். கடந்த ஆண்டு அவர் நியமனம் செய்ததை ரத்து செய்துவிட்டு இட ஒதுக்கீடுபடி மதிப்பெண்கள் நிர்ணயித்து புதிய பட்டியல் தயாரித்து 35 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதை அரசு செய்யாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். இவ்வாறு பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog