பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு: அரசுக்கு, கல்வித்துறை அறிக்கை சென்னை: தொடக்க கல்வித் துறையில், பதவிஉயர்வு இல்லாமல் தவிக்கும் பட்டதாரி ஆசிரியர் நிலை குறித்து, "தினமலர்" நாளிதழில், நேற்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, தமிழக அரசுக்கு, பள்ளி கல்வித்துறை, அறிக்கை சமர்ப்பித்தது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுபெற்று, தொடக்க கல்வித் துறையில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வு பெற வழியில்லாமல், பல ஆண்டுகளாக தவித்து வருகின்றனர். ஒரே தகுதியுள்ள பட்டதாரி ஆசிரியர்களில், பள்ளி கல்வித் துறையில் பணியாற்றுபவர்கள், முதுகலை ஆசிரியர், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் என, பல பதவி உயர்வுகளை பெறுகின்றனர். அதே தகுதியுடன், தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியைத் தவிர, வேறு எந்த பதவி உயர்வும் பெற முடிவதில்லை. நடுநிலைப் பள்ளிகள், அதிக எண்ணிக்கையில், தரம் உயர்த்தப்படுவதால், இருக்கும் ஒரே பதவி உயர்வும், பாதிப்பதாக புலம்பி வருகின்றனர். இந்நிலை குறித்து, "தினமலர்" நாளிதழில், நேற்று, விரிவாக செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, இந்த பிரச்னை குறித்து, அறிக்கை சமர்ப்பிக்க, அரசு உத்தரவிட்டது. அதன்படி, பள்ளி கல்வித் துறை, விரிவான அறிக்கையை, நேற்று சமர்ப்பித்தது. இந்த பிரச்னை தீர்வதற்கு, ஒரே ஒரு வழி இருப்பதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆசிரியர் தேர்வு, டி.ஆர்.பி., மூலம் நடக்கிறது. ஆனால், பணி நியமனம், பள்ளி கல்வித் துறை, தொடக்க கல்வித் துறை என, இரு துறைகளில் நடக்கிறது. இதை தவிர்த்து, டி.ஆர்.பி., தேர்வு அடிப்படையில், ஒரே பணி நியமனமாக நடந்தால், பிரச்னை வராது என, கல்வித் துறை தெரிவிக்கிறது. எந்த துறையில் பணியாற்றினாலும், டி.ஆர்.பி., தேர்வு வரிசை அடிப்படையில், பதவி உயர்வுக்கு பரிசீலனை செய்யலாம் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், இதுகுறித்து, தமிழக அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் எனவும், தங்களால் எதுவும் செய்ய முடியாது எனவும், கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Comments

Popular posts from this blog