தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 32 பேருக்கு ஆசிரியர் பணி வழங்க உத்தரவு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாமல் 32 பேர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உறுதி செய்தது.

விருதுநகர் மாவட்டம், சாட்சியாபுரத்தைச் சேர்ந்த ஜெயசாந்தி உள்ளிட்ட 32 பேர் தாக்கல்செய்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஹரிபரந்தாமன் இந்த உத்தரவை பிறப்பித்தார். 

பள்ளி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில்தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றவிதிமுறையை மத்திய அரசு 2010 ஏப். 1-இல் கொண்டு வந்தது. அதற்கு முன்பே எங்களை ஆசிரியர்களாக பணிகளில் நியமிக்க மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஒப்பதல் அளித்தனர். இருப்பினும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்தால், எங்கள் பணி நியமனத்துக்கான ஒப்புதலை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ஏற்க மறுத்துள்ளார். 

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்கள் போதுமான அளவில் இல்லாத நிலை ஏற்பட்டால், ஓராண்டு காலத்தில் மத்திய அரசை, மாநில அரசு அணுகி தகுதியில் இருந்து விதிவிலக்கு பெறவேண்டும். 

ஆனால், தமிழக அரசு அவ்வாறு கோரவில்லை. இதனால், பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு பணி வழங்க உத்தரவிடவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி டி. ஹரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு: மத்திய அரசின் சட்ட விதிப்படி படி, ஆசிரியர்களை பணியில் நியமிக்கமுடியாத நிலை ஏற்பட்டால், மாநில அரசு அதற்கான காலக்கெடுவுக்குள் விதிவிலக்கு கோரி விண்ணப்பித்து இருக்க வேண்டும். 

ஆனால், தமிழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டபோதும் அரசு அதற்காக மத்திய அரசை அணுகவில்லை. இந்தச் சூழ்நிலையில் 32 மனுதாரர்களையும் ஆசிரியர்களாக பணியில் நியமிக்க மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஒப்புதல் அளித்ததில் தவறு காணமுடியவில்லை. 

எனவே, 32 பேருக்கும் அதிகாரிகள் தாற்காலிக ஒப்புதல் அளிக்க வேண்டும். மேலும், அதற்கான ஊதியம் பெறுவதற்கும் அனுமதிவழங்க வேண்டும். இந்த 32 பேரும் 2015 மார்ச் 31-க்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெறாவிட்டால் அவர்களை நீக்கம் செய்து தகுதியானவர்களை நியமிக்கலாம். 

மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசு அவ்வப்போது தகுதித் தேர்வுகளை நடத்தவேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணை ஜூன் 6-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog