அனைத்து அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில் ஒரே சமயத்தில்சம்பளம்-புதிய சாப்ட்வேர் அறிமுகம் புதிய சாப்ட்வேர் மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கடந்த 5 வருடங்களாக இசிஎஸ் முறையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இம்முறையில் அரசுத் துறைகள், பள்ளிகள் சம்பளப் பட்டி யலை சிடி மூலம் கருவூலத்தில் கொடுத்து விட வேண்டும். கருவூல அதிகாரிகள் ஒப்புதல் அளித்தவுடன் அந்த பட்டியல் அந்தந்த மாவட்ட பாரத ஸ்டேட் வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் வங்கிகள் மூலம் அனைத்து ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சேமிப்பு கணக்கில் சம்பளம் போய் சேர்ந்துவிடும். இதனால் பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் உடனடியாக சம்பளம் கிடைத்து விடும். ஆனால் மற்ற வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஓரிரு நாட்கள் தாமதமாக சம்பளம் கிடைக்கும். இந்த தாமதத்தை தவிர்க்க, புதிதாக ‘பேரோல் 9.0’ என்ற சாப்ட்வேரை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த சாப்டுவேரில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளப் பட்டியல் தயாரிக்க வேண்டும். அரசு ஊழியர்கள் எந்தெந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கிறார்களோ அந்த வங்கியின் எம்ஐசிஆர் கோடு நம்பரும் ஏற்றப்பட வேண்டும். பின்னர் அந்த சம்பளப் பட்டியலை கருவூலத்தில் கொடுக்க வேண்டும். கருவூல அதிகாரி ஒப்புதல் அளித்தவுடன் பாரத ஸ்டேட் வங்கிக்கு சம்பளப் பட்டியல் அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு அந்த சம்பளப் பட்டியல் அனைத்தும் சென்னையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் சிசிபிசி மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து அனைத்து ஊழியர்களின் சேமிப்பு கணக்கிலும் ஒரே சமயத்தில் சம்பளம் ஏற்றப்படும். இதன் மூலம் அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே நாளில் சம்பளம் கிடைத்துவிடும். இதன் மூலம் சம்பள பட்டுவாடாவில் தேவையற்ற தாமதம் தவிர்க்கப்படும்.

Comments

Popular posts from this blog