சட்டத்திற்கு முரணாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களை நீக்க முடிவு?- Dinamalar

கட்டாயக் கல்வி சட்டத்திற்கு முரணாக, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்த இடைநிலைமற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, பணியில் இருந்து நீக்குவதற்கு, கல்வித்துறை முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தை, மத்திய அரசு, 2009ல் கொண்டு வந்தது. இச்சட்டம், 2010, ஏப்ரல் 1ம் தேதி, அமலுக்கு வந்தது. 

இந்த சட்டத்திற்குள் வரும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர், சட்டத்தின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தகுதித் தேர்வு தொடர்பாக, என்.சி.டி.இ., (நேஷனல் கவுன்சில் பார் டீச்சர் எஜூகேஷன்) அறிவிக்கை, 2010, ஆகஸ்ட், 23ல் வெளியானது. 
இந்த தேதியில் இருந்து, ஆசிரியர் தகுதித்தேர்வு, அமலுக்கு வந்தது.

அதன்படி, 2010, ஆகஸ்ட், 23ம் தேதிக்கு முன், ஆசிரியர் தேர்வுப் பணிகளை துவங்கி, இந்த தேதிக்குப் பின், பணியில் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் மற்றும் இந்த தேதிக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத தேவையில்லை. இந்த தேதிக்குப் பின், பணியில் சேர்ந்த ஆசிரியர் அனைவரும், 5 ஆண்டுகளுக்குள், தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்றும், இல்லையெனில், இவர்கள் தகுதிஇ

ல்லாதவர்களாக கருதி, பணி நீக்கம் செய்யலாம் என்றும், கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட தேதிக்குப் பின், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 500க்கும் மேற்பட்ட இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், பணியில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களை பணி நீக்கம் செய்வதற்கு, கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக,ஆசிரியர் வட்டாரங்கள் தெரிவித்தன. 

அகில இந்திய துவக்கப்பள்ளி ஆசிரியர்சங்கங்களின் கூட்டமைப்பின் செயலர் அண்ணாமலை கூறுகையில், "தொடக்க கல்வித்துறை பள்ளிகளில் சேர்ந்த ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய, உத்தரவுகள் தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த முடிவை, தமிழக அரசு உடனே கைவிட வேண்டும்" என்றார். தொடக்க கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில், "ஆர்.டி.ஐ., விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என, மாவட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம். பணி நீக்கம் குறித்து, எந்த முடிவும் எடுக்கவில்லை" என, தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog