ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய முடியாது வேலைக்கு படிப்பு போதாது தகுதியும் இருக்க வேண்டும் 

மதுரை:தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்யக்கோரி, பள்ளி நிர்வாகிகள் பலர் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர். மனுக்களில், Ôஎங்கள் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த காலியிடங்களில் ஆசிரியர்களை நியமிக்க அனுமதி கேட்டு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினோம். ஆனால், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என கல்வி அதிகாரி உத்தரவிட்டார். 
அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

மனுக்களை நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் விசாரித்தார். நீதிபதி பிறப்பித்த உத்தரவு:தமிழகத்தில் ஆசிரியர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையிலும், பின்னர், மாநிலபதிவு மூப்பு அடிப்படையிலும் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தி,அதில் வெற்றி பெறுபவர்களை மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி, தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது.மாணவர்களுக்கு கட்டாய கல்வி, தரமான கல்வி கொடுக்க வேண்டியது அரசுகளின் கடமை. பதிவு மூப்பு அடிப்படையில் மட்டும் ஆசிரியர்களை நியமிக்கும் போது தகுதியான, தரமான ஆசிரியர்கள் கிடைக்கமாட்டார்கள். 

தரமான கல்வி அளிக்காத அரசு உதவி பெறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுத, ஐந்து ஆண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.தகுதியற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க முடியாது. ஆசிரியர்கள் தகுதியானவர்களாக இருக்க வேண்டும். 

கடந்த 1991&92ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை என கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அந்தப் பள்ளிகளில் படித்தவர்கள் பலர் ஆசிரியர்களாக வந்துள்ளனர். 685 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் ஒவ்வொரு ஆண்டும் 73 ஆயிரம் பேர் படிப்பு முடித்து வெளியே வருகின்றனர்.அவர்கள் வேலைக்காக காத்திருக்கின்றனர். 

அவர்களில் தரமானவர்களை தேர்வு செய்ய தேர்வு கட்டாயம். பட்டம் இருந்தால் மட்டுமே ஒருவரை வேலைக்கு தேர்வு செய்ய முடியாது. அந்த வேலைக்கான தகுதியும் அவருக்கு இருக்க வேண்டும். எனவே, ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய முடியாது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Comments

Popular posts from this blog