வேலை கிடைக்காத முதுகலை ஆசிரியர்கள் முற்றுகை : டி.ஆர்.பி., அலுவலகத்தில் ஓயவில்லை பரபரப்பு -அதெப்படி ஓயும் !!!!!!
முதுகலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சிபெற்றும், இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பெறாத தேர்வர்கள், நேற்று, டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தினமும், 100க்கும் மேற்பட்டோர், டி.ஆர்.பி., அலுவலகத்தில் குவிந்துவிடுவதால், எப்போதும் ஒரே பரபரப்பாக காணப்படுகிறது.
டி.இ.டி., தேர்வு, அதைத் தொடர்ந்து முதுகலை ஆசிரியர்
தேர்வு இறுதிப் பட்டியலை, டி.ஆர்.பி.,வெளியிட்டதில் இருந்து, பல்வேறு பிரச்னைகளுடன், தினமும், 100 பேர், டி.ஆர்.பி., அலுவலகத்தில் குவிந்துவிடுகின்றனர். தேர்வில் தேர்ச்சி பெற்றும், இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பெறாதவர்கள், தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பில், ஒருசில சான்றிதழ்களைகொடுக்காததால், இறுதி பட்டியலில் இடம் பெறாதவர்கள், தமிழ் வழியில் படித்து தேர்வு பெற்றும், அதற்கான இடஒதுக்கீட்டின் கீழ் வேலை கிடைக்காதவர்கள் என, பல்வேறு காரணங்களுடன், மனுக்கள் கையுமாக, பட்டதாரிகள் வருகின்றனர்.
இப்படி வருபவர்களை, முறையாக அழைத்து, அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற, டி.ஆர்.பி., மறுப்பதால், அலுவலக வாசலில் திரண்டு, கோஷம் போடுவதும், பட்டதாரிகளின் வாடிக்கையாக இருக்கிறது. முதுகலை ஆசிரியர், இறுதிபட்டியலில் இடம்பெறாத தேர்வர்கள் பலர், நேற்றும், டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தேனியைச் சேர்ந்த அம்பிகா கூறுகையில்,""நான், வேதியியல் பட்டதாரி. தேர்வில், 110 மதிப்பெண்களை பெற்று, தேர்வு பெற்றேன். சான்றிதழ் சரிபார்ப்பின்போது, பி.எட்., சான்றிதழை அளிக்கவில்லை. தாமதமாக கிடைத்த சான்றிதழை, டி.ஆர்.பி., அலுவலகத்தில் ஒப்படைத்தும், இறுதி தேர்வு பட்டியலில், எனது பெயர் சேர்க்கப்படவில்லை. கேட்டால், அதிகாரிகள், எந்த பதிலும் அளிப்பதில்லை,'' என, புலம்பினார்.
இதேபோல், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு, 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற அரசாணையை, டி.ஆர்.பி., அமல்படுத்தவில்லை என்றும், பலர் குற்றம் சாட்டினர். இந்த ஒதுக்கீட்டின் கீழ், டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்திருந்தால், தமிழ் வழியில் படித்த பலருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும் எனவும், அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழ் வழி படித்து, அதற்கான முன்னுரிமை பிரிவின் கீழ் விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை, ஆய்வு செய்து வருகிறோம். பள்ளிக்கல்வி முதல், குறிப்பிட்ட கல்விதகுதி வரை, அனைத்துப் படிப்புகளையும், தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும். ஆனால், பலர், இடையில், ஏதாவது ஒரு கல்வியை, ஆங்கில வழியில் படித்தவர்களாக இருக்கின்றனர். எனவே, விண்ணப்பங்களை முழுமையாக ஆய்வு செய்தபின், இந்த ஒதுக்கீட்டின் கீழ் தகுதிபெறும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு, தனியாக அறிவிப்பு செய்யப்படும். பணியிடங்கள் அதிகம் இருப்பதால், தகுதியான விண்ணப்பதாரர்கள், கவலைப்பட தேவையில்லை.
இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
பட்டதாரிகள் வாழ்க்கையில் விளையாடும் டி.ஆர்.பி.,
* எந்த பாடங்கள், எந்த படிப்பிற்கு நிகரானது என, பல்வேறு கால கட்டங்களில், உயர் கல்வித்துறை, அரசாணைகளை வெளியிட்டுள்ளது.
* இந்த அரசாணைகள் குறித்து, டி.ஆர்.பி.,க்கே தெரியவில்லை. இதனால்,தேர்வில் தேர்வு பெற்ற பட்டதாரிகள் பலர், வேலை கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர்.
* உயர்கல்வித்துறையிடம் கேட்டு, இந்த அரசாணைகளை, இணையதளத்தில் வெளியிடவும், டி.ஆர்.பி., நடவடிக்கை எடுக்கவில்லை.
* தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்பில், 20 சதவீதம் இடஒதுக்கீடு அளித்து, முந்தைய அரசு, அரசாணை வெளியிட்டது. இந்த ஒதுக்கீட்டை, டி.ஆர்.பி., சரிவர கடைபிடிப்பது இல்லை என, தேர்வர்கள் மத்தியில் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
* டி.இ.டி., தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வில், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு, வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறதா என்ற விவரங்களை, நேற்றுவரை, டி.ஆர்.பி., வெளியிடவில்லை.
* வேலைக்கு ஏற்ற கல்வித்தகுதியை மட்டும், தமிழ் வழியில் படித்திருந்தால் போதுமானது என, அரசாணையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பள்ளிப்படிப்பு முதல், வேலைக்கு ஏற்ற கல்வி நிலை வரை, அனைத்து படிப்புகளையும் தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும் என கூறி, ஏராளமான பட்டதாரிகளுக்கு, வேலை வழங்க, டி.ஆர்.பி., மறுத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Comments
Post a Comment