ஆசிரியர்களை அழைத்து வர ரூ.500 வசூல்; சி.இ.ஓ.,க்கள் மும்முரம் சென்னை: நாளை மறுநாள், சென்னையில் நடக்கும் பணி நியமன உத்தரவு வழங்கல் விழாவில் பங்கேற்க உள்ள ஆசிரியர்களிடம், வாகன செலவிற்காக, தலா, 500 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த பொறுப்பு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்ற, 18,382 ஆசிரியர்களுக்கு, சென்னையில், இம்மாதம், 13ம் தேதி நடக்கும் விழாவில், முதல்வர் ஜெயலலிதா, பணி நியமன உத்தரவுகளை வழங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள், மும்முரமாக நடந்து வருகின்றன. தேர்வு பெற்ற ஆசிரியர்கள் அனைவரும், சென்னைக்கு வர வேண்டும் என, கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும், 13ம் தேதி காலையில், சென்னையில் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களை அழைத்து வரும் பொறுப்பு, மாவட்ட முதன்மைக் கல்வி அவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், ஆசிரியர்களை, பஸ்கள் மூலம், சென்னைக்கு அழைத்து வர, சி.இ.ஓ.,க்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த செலவிற்காக, ஒவ்வொரு ஆசிரியரிடமும், தலா, 500 ரூபாய் வசூலித்து வருகின்றனர். ஆசிரியருடன், துணைக்கு யாரும் வரக்கூடாது எனவும், விழா நடக்கும் நாளன்று காலை சிற்றுண்டி, சாப்பாட்டு செலவை, சம்பந்தபட்ட ஆசிரியர்களே பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத,சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ஆசிரியர்கள், தேவையில்லாமல், சென்னைக்கு வந்து அலைய வேண்டாம் என்பதற்காகத் தான், "ஆன்-லைன்&' கலந்தாய்வு நடத்துகின்றனர். இது, வரவேற்கதக்கது. ஆனால், 18 ஆயிரம் பேரும், இப்போது, சென்னைக்கு வர வேண்டும் என, கூறுகின்றனர். 18 ஆயிரம் பேருக்கும், முதல்வர், பணி நியமன உத்தரவுகளை வழங்குவதற்கு வாய்ப்பே இல்லை. 10 பேருக்கோ, 15 பேருக்கோ, உத்தரவுகளை வழங்குவார். அதன்பின், அதிகாரிகள் தான் வழங்கப் போகின்றனர். அதற்கு, எதற்கு இப்படி தேவையில்லாமல், இவ்வளவு பெரிய பிரம்மாண்டம் என, தெரியவில்லை. ஒரு ஆசிரியரிடம், 500 ரூபாய் என்றால், சென்னை நகரில் உள்ள ஆசிரியர்களை தவிர்த்து, கணக்கு பார்த்தாலும், 90 லட்சம் ரூபாய்க்கு வசூல் குறையாது. இவ்வளவு தொகையையும், மாவட்ட அதிகாரிகள், முறையாக செலவு செய்வார்களா என்பதும் கேள்விக்குறிதான். இவ்வாறு, அந்த நிர்வாகி தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog