திமுக ஆட்சியில் முறைகேடு இல்லாமல் 55 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்

 திமுக ஆட்சியில் 55 ஆயிரம் ஆசிரியர்கள் முறைகேடு, குளறுபடி இல்லாமல் நியமனம் செய்யப்பட்டார்கள். ஆனால், அதிமுக ஆட்சியில் அப்படி இல்லை என்று கருணாநிதி கூறியுள்ளார். 

திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2001,2006ல்அதிமுக ஆட்சியில் 45 ஆயிரத்து 987 ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில், அதாவது அவர்கள் பெறவேண்டிய ஊதியத்தில் ஏறத்தாழ 3ல் ஒரு பங்கு ஊதியம் மட்டுமே பெறும் நிலையில் நியமிக்கப்பட்டிருந்தவர்களுக்கு எல்லாம், 2006ல் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் காலமுறை ஊதியம், அதாவது அவர்கள் பெற்று வந்த ஊதியத்தைவிட 3 மடங்கு அதிக ஊதியம் கொடுத்து ஆசிரியர்களை மகிழச் செய்தது. 

 அத்துடன் 2006க்குப் பின், தொடக்கக் கல்வித் துறையில் 12 ஆயிரத்து 426 இடைநிலை ஆசிரியர்கள், 14 ஆயிரத்து 115 பட்டதாரி ஆசிரியர்கள் என 26 ஆயிரத்து 541 ஆசிரியர்களும், பள்ளிக் கல்வித் துறையில் 70 இடைநிலை ஆசிரியர்கள், 17 ஆயிரத்து 45 பட்டதாரி ஆசிரியர்கள், 4 ஆயிரத்து 665 ஆசிரியர் பயிற்றுநர்கள், 3002 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள்,525 தமிழாசிரியர்கள், 1131 சிறப்பா சிரியர்கள், 140 தொழில் ஆசிரியர்கள், 1686 கணினி ஆசிரியர்கள் என 27 ஆயிரத்து 739ஆசிரியர்களும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் 216 விரிவுரையாளர்களும், 32 முதுநிலை விரிவுரையாளர்களும் என மொத்தம் 55 ஆயிரத்து 53 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டார்கள் திமுக ஆட்சியில்.

 இவர்கள் தவிர, ஆசிரியர் அல்லாத 1140 பணியாளர்களும், கருணை அடிப்படையில் 449 பணியாளர்களும், அரசு மேல் நிலைப் பள்ளிகளில் விவசாயம் கற்பிக்க 176 விவசாயப் பயிற்றுநர்களும் நியமிக்கப்பட்டார்கள். 2006 முதல் 2010 வரை நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில் ஆசிரியர் கல்வித் தகுதி பெற்ற 1114 மாற்றுத் திறனாளிகள் முன்னுரிமை அடிப்படையில் ஆசிரியர்களாக அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டார்கள். 

 திமுக ஆட்சிக் காலத்தில் இத்தனை பேர் நியமிக்கப்பட்டார்களே, அப்போது ஏதாவது புகார்கள் வந்ததுண்டா? ஏதாவது முறைகேடு சொன்னதுண்டா? ஏதாவது குளறுபடிகள் நடந்ததுண்டா? ஆனால் இப்போது அதிமுக ஆட்சியில் என்ன நிலைமை? இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தேர்வில் நடந்த, குளறுபடிகளைத் தொடர்ந்து, முதுகலை ஆசிரியர் தேர்விலும் பெரும் குளறுபடி நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

உடல் தகுதி நன்றாக இருப்பவர்கள் பலர், ஊனமுற்றோர் பிரிவில் தேர்வாகி உள்ளனர். சரியான கல்வித் தகுதி இல்லாதவர்களும் இறுதிப் பட்டியலில் தேர்வாகி உள்ளனர் என்று செய்தி வருகிறது. இறுதி நேரத்தில் சற்று அவசரமாக இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டதால் மீண்டும் பட்டியல் சரிபார்க்கப்பட்டது; 

 மற்றுமொரு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட வேண்டியுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக இன்னொரு செய்தி வந்துள்ளது. நாம் கேட்பதெல்லாம் சான்றிதழ்களை சரிபார்க்காமல் கூட எதற்காக அவசர அவசரமாக பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன? அதனால் எந்த அளவிற்கு குழப்பங்கள், குளறுபடிகள்? விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் 36 ஆசிரியர்களுக்கு மட்டுமே நேரடியாகப் பணி நியமன ஆணையினை வழங்க, ஏனையோர்க்கு மற்றவர்கள் பணி நியமன ஆணையினை வழங்கினாராம். 

13ம் தேதி பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்ட போதிலும், வழக்கமாக பணி நியமன ஆணைகள் வழங்குவதற்கு முன்பு, பலமுறை அவர்களுடைய சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பிறகே, ஆணைகள் வழங்கப்படும். ஆனால் இந்த முறை நேரம் இல்லாத காரணத்தால், சான்றிதழ்கள் சரி பா£க்கப்படும் பணிகளை நிறைவேற்றாமல் பணி நியமன ஆணைகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுவிட்டன. பணி நியமன ஆணைகள் வழங்கி விட்டு சான்றிதழ்களைச் சரிபார்ப்பதால், அதில் தகுதி இல்லாத வர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுடைய தேர்வு ஆணையை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற் படும். 

அடுத்து ஒரு செய்தி. அதாவது 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் தொடர்பான விவரங்களையெல்லாம் ஆன் லைன் வழியாக ஜனவரி 4ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று ஓர் உத்தரவு. இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளன. 10ம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்கள் சுமார்11 லட்சம் மாணவர்கள் உள்ளனர்.

 18 மணி நேரம் மின்வெட்டு. சில பள்ளிகளில் கம்ப்யூட்டர் வசதிகள் மற்றும் இண்டர்நெட் வசதிகள் இல்லை. இதில் எவ்வாறு ஜனவரி 4ம் தேதிக்குள் மாணவர்கள் தங்களைப் பற்றிய முழு விவரங்களை ஆன் லைன் மூலமாகத் தெரிவிக்க இயலும். இந்தத் தேதியை நீடிக்க வேண்டுமென்று நான் எழுதியிருந்தேன். அதன் பிறகு கூட அரசுத் தரப்பில் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை. பள்ளிக் கல்வித் துறை பாழ்பட்டால், பாதிப்புக்குள்ளாவது மாணவர்களின் எதிர்காலம் தான். இன்று வற்றிப் போகும் குளமாகவல்லவா குளறுபடிகளும், குறைபாடுகளும் நிறைந்த பள்ளிக் கல்வித் துறை காட்சியளிக்கிறது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog