ஆசிரியர் தகுதி மறுதேர்வு: சான்றிதழ்சரிபார்ப்பில் பங்கேற்காத 533 பேருக்கு மற்றொரு வாய்ப்பு  

ஆசிரியர் தகுதி மறுதேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத 533 பேருக்கு மற்றுமொரு வாய்ப்பை வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் மறுதேர்வு ஆகியவற்றின் மூலம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 18,382 பேரின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் புதன்கிழமை மாலை வெளியிடப்பட்டது. 

இந்த இறுதிப் பட்டியலுடன் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: 
ஆசிரியர் தகுதி மறுதேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நவம்பர் 6 முதல் 9 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இதுதொடர்பாக அனைத்து ஊடகங்களிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இருந்தும் மறுதேர்வில் வெற்றி பெற்ற நிறைய பேர் இந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கவில்லை. இவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் மற்றுமொரு வாய்ப்பை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

முதல் தாளில் வெற்றி பெற்றவர்களில் 449 பேரும், இரண்டாம் தாளில் வெற்றி பெற்றவர்களில் 84 பேரும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரவில்லை. மேற்கண்ட 533 பேர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க விரும்பினால், அதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு எழுத்துப்பூர்வமாக கோரிக்கை மனுவை வழங்கலாம். அவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு வழங்குவது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலித்து, சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை அறிவிக்கும். 

47 பேருக்கு கடைசி வாய்ப்பு: சான்றிதழ் சரிபார்ப்பின்போது வேலைவாய்ப்பு பதிவு அட்டை, மதிப்பெண் சான்றிதழைச் சமர்ப்பிக்காததால் 47 பேரின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த 47 பேரும் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில்உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு டிசம்பர் 10-ம் தேதி (திங்கள்கிழமை) உரிய சான்றிதழ்களுடன் நேரில் வரலாம். இதற்காக அன்றைய தினம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் வரத் தவறினால் அவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படாது. 

சிறுபான்மை மொழிப்பாடங்களில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் தனியாக வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித் துள்ளது. தேர்வு செய்யப்பட்ட 18 ஆயிரம் பேரையும் பணி நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. சில நாள்களில் இவர்கள் பணிநியமனம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog