ஏன் இந்தப் பாகுபாடு?
ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் எந்த
ஒரு
போட்டித் தேர்விற்கும் சாதி
வாரியாக அடிப்படை தேர்ச்சி மதிப்பெண்களில் சலுகை வழங்குவது வழக்கம். மற்ற
மாநிலங்களில் வழங்கப்படும் சலுகையானது தமிழ்நாட்டில் மட்டும் ஏன்
மறுக்கப்படுகிறது என்று குரல் எழுப்பியுள்ளனர் தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய ஆசிரியர்கள்.
கட்டாய கல்விச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, நாடு முழுவதும் செயல்படும் பள்ளிகளில் கல்வியின் தரம் உயரவேண்டும் என்பதற்காக, ஆசிரியர்கள் தகுதித் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யவேண்டும் என்று, மத்திய அரசு அறிவித்தது. ஆசிரியர்களை தகுதித் தேர்வு மூலம் தேர்வு செய்யும் பொறுப்பை என்.சி.டி.இ. (நேஷனல் கவுன்சில் ஃபார் டீச்சர் எக்ஸாமினேஷன்) யிடம் ஒப்படைத்தது மத்திய அரசு.
அதன்படி
மத்திய அரசின் போட்டித் தேர்வுக் கொள்கைகளையும், என்.சி.டி.இ. அறிவித்துள்ள மதிப்பெண் தளர்வுகளையும் தமிழக அரசு கடைப்பிடிக்கவில்லை என்பதுதான் தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய ஆசிரியர்களின் கேள்வி.
இது குறித்து ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் சிலர் கூறும்போது, முதல் முறையாக ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியானபோது, பாடத்திட்டம், கட்டணம் செலுத்தும் முறை குறிப்பிடப்பட்டிருந்ததே தவிர மதிப்பெண் தளர்வு குறித்து எந்தவொரு அறிவிப்பையும் தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கவில்லை. ஒருவேளை ஆசிரியர் தகுதித் தேர்வு முடியும் தருவாயில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். அதுவும் நடக்கவில்லை. ஆந்திர மாநிலத்தில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தகுதித் தேர்வில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினப் பிரிவு மாணவர்களுக்கு அடிப்படை தேர்ச்சி மதிப்பெண்களில் 40 மதிப்பெண்கள் தளர்வு அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஸ்லெட் மற்றும் நெட் தேர்வில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு தேர்ச்சிக்கான அடிப்படை மதிப்பெண்ணில் தளர்வுச் சலுகை அளிக்கப்படுகிறது. கல்லூரி ஆசிரியர்கள் தேர்விற்கே ஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண்கள் தளர்வு அளிக்கும்போது, ஆசிரியர் தகுதித் தேர்வில் மட்டும் தமிழகம் பாரபட்சம் பார்ப்பது ஏன் என்று புரியவில்லை" என்கின்றனர்.
இதுகுறித்து ஆசிரியர் தகுதி மறுதேர்வு எழுதிய விழுப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியை சங்கீதா கூறும்போது, நான் அருந்ததியினர் பிரிவைச் சேர்ந்தவள். தற்போது ஆசிரியர் தகுதி மறுதேர்வு எழுதியிருக்கிறேன். அரசு வெளியிட்டுள்ள விடைகளையும், தேர்வில் நான் அளித்த விடைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது 88 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறேன். ஆனால், அடிப்படைத் தகுதி மதிப்பெண்ணோ 90. என்.சி.டி.இ. அறிவித்துள்ள ஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண்ணில் தளர்வு அளிக்கப்படும் பட்சத்தில் 88 மதிப்பெண்ணானது என் பணியை உறுதி செய்துவிடும்" என்றார்.
தற்போது நடந்து முடிந்துள்ள தேர்விற்கு என்.சி.டி.இ. அறிவித்துள்ள மதிப்பெண் தளர்வுச் சலுகை மற்ற மாநிலங்களைப்போல தமிழகத்திலும் அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் தற்போது தேர்வு எழுதியிருக்கும் ஆசிரியர்களின் கோரிக்கை.
Comments
Post a Comment